தமிழ்நாடு

tamil nadu

அதிமுக ஆட்சியில் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவத்துறையை தட்டி எழுப்பியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

By

Published : Jun 19, 2023, 8:07 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை தூங்கிக்கொண்டிருந்ததாகவும் தற்போது அதை தட்டி எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 63 கோடி ரூபாய் செலவில் அரசு பல் மருத்துவக்கல்லூரியின் கட்டுமானப்பணிகள் முடிவுற்றுள்ளது. இதைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வளவு நாள் தூங்கியதால் தான், தூங்கிய துறையை இப்போது தூக்கி நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும், தற்போது மருத்துவத்துறை செய்தி வரும் பல்வேறு மகத்தான சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய மருத்துவ கவுன்சில் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளில் சில குறைபாடுகளைக் கூறியிருந்தார்கள். அதனை நிவர்த்தி செய்து அறிக்கை அனுப்பியதன் மூலம் தற்போது அந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தத் தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேலும், புதுக்கோட்டையில் 63 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணி தொடங்கப்பட்டு அப்பணி நிறைவடையும் சூழலில் அடுத்த மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவித்த அமைச்சர்,1953 ஆம் ஆண்டு ஒரு அரசு பல்மருத்துக் கல்லூரி தொடங்கப்பட்டது எனவும் அதன் பின் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், கவுன்சிலிங் நடைபெற்று முடிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைப்பார் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டினால் இதுவரை செய்ய முடியாத விஷயங்களை தற்போது செய்து வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் பதினைந்து மாத காலத்தில் ஆறு லட்சத்து 3 ஆயிரம் சதுர அடி பரப்பில் உள்ள கட்டிடத்தைத் தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறையாகக் கட்டி 15 மாதத்தில் திறந்து வைக்கப்பட்டிருப்பது என்பது இந்தத் துறையில் நடைபெற்றுள்ள மகத்தான சாதனை எனவும் கூறினார்.

மேலும், மக்களைத் தேடி மருத்துவத்தில் ஒரு கோடியே ஐம்பதாயிரத்திற்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் உயிர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் காப்பாற்றப்பட்டுள்ளது, இதையெல்லாம் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை தூங்குவதாகத் தெரிவித்துள்ளார். தூங்குவது அவரா அல்லது துறையா என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசியல் பற்றி விஜய்யே சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்? - நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!

ABOUT THE AUTHOR

...view details