தமிழ்நாடு

tamil nadu

புதுகை பூங்காவில் பேனா சிலை அமைத்தது எதற்காக? - நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதம்!

By

Published : Feb 28, 2023, 7:56 PM IST

புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி பூங்காவில் எந்தவித அனுமதியும் இன்றி பேனா சிலை அமைத்தது எதற்காக, என புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த செந்தில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுகை நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதம்..!
புதுகை நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதம்..!

புதுகை நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதம்..!

புதுக்கோட்டை: நகராட்சியின் இயல்பு கூட்டம், நகர் மன்ற தலைவர் திலகவதி தலைமையில், துணைத் தலைவர் லியாகத் அலி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்று காரசார விவாதம் செய்து பேசியபோது,

ராஜேஸ்வரி (திமுக): 'எனது வார்டு சண்முகா நகர் பகுதியில் சாக்கடை நீர் சாலையில் செல்கிறது. மேலும் பொன்னம்பட்டி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகராட்சி முழுவதும் காவிரி குடிநீர் சப்ளை வந்தாலும், எனது வார்டு பகுதியில் கடையக்குடியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நான் பலமுறை வலியுறுத்தி பேசியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது' என்றார்.

4-வது வார்டு உறுப்பினர், பர்வேஸ், விஜய் மக்கள் இயக்கம்: 'எனது வார்டு இறைவன் நகர் பகுதியில் ரூ.9 கோடியே 25 லட்சம் மதிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சத்யா ஆதரவற்றோர் இல்லம் திறக்கப்பட்டு, பல நாட்கள் ஆகியும் அந்த பகுதிக்கு செல்ல முழுமையான சாலை வசதி இல்லை. எனவே, அங்கு வருவோர் பயன்பெறும் வகையில் தரமான தார் சாலை அமைக்க வேண்டும்’ எனக் கூறினார்.

26-வது வார்டு, கார்த்திக் மெஸ் மூர்த்தி, திமுக: 'எனது வார்டியில் உள்ள புதுக்குளத்தை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கும், நிதியை பெற்றுத்தர பெற வழிவகை செய்த அமைச்சர் மற்றும் நகர்மன்றத் தலைவிக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். எனது வார்டுப் பகுதியில் கழிவுநீர் செல்லும் வடிநீர் வாய்க்கால்களில் கட்டட கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேடுகளை உண்டாக்கி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சிக்கு கோடீஸ்வரர்கள் வரி பாக்கி வைத்திருக்கும்பொழுது, ஒரு தவணை மட்டும் செலுத்த வேண்டிய நபர்களின் வீடுகளுடைய பாதாள சாக்கடைத் திட்ட இணைப்பை அடைப்பேன் என மிரட்டுவது, தவறான முன்னுதாரணம். அதேபோல் வணிக நிறுவன சொத்துவரி செலுத்தாத பட்சத்தில் குப்பைத் தொட்டியை வைப்பது, மிரட்டுவது போன்ற செயல்கள் நகராட்சியினருக்கு உகந்ததல்ல. வியாபாரம் நடைபெறும் 16 வீதிகளுக்கு தனி குப்பை அள்ளும் வாகனம், துப்புரவு தொழிலாளர்களை நியமித்து உடனடியாக குப்பைகளை அள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

39-வது வார்டு உறுப்பினர், ஜெயா கணேசன் அதிமுக: 'எனது வார்டில் செயல்பட்டு வரும் மாட்டு இறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்றி அந்தப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் திருக்கட்டளை செல்லும் சாலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கு சுற்றுச்சுவர் அமைத்து குடிநீர் தொட்டி காண பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.

35-வது வார்டு உறுப்பினர் ஜாகிர் உசேன் பேசும்போது: ’எனது வார்டுக்குட்பட்ட 300 மீட்டர் சாலையை, நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுவரை ஐந்து முறை அளந்திருப்பதாகவும், அந்தப் பணி மிக காலதாமதம்’ ஆவதாகவும் தெரிவித்தார். இதன்பின்னர், இந்த உறுப்பினருக்கும் நகராட்சி பொறியாளருக்குமிடையே மிகுந்த வாக்குவாதம் ஏற்பட்டதில், நகராட்சி பொறியாளர், ’இனிமேல் எந்தவித கேள்வியும் என்னிடம் கேட்கக் கூடாது. நகர் மன்றத்தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.

இதனையடுத்து உறுப்பினர் ஜாகிர் உசேன், ’நாங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று கூறியதால், சிறிது நேரம் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் நகர் மன்றத் தலைவர் இருவரையும் சமாதானப்டுத்தி அமர வைத்தார்.

34-வது வார்டு உறுப்பினர், ராஜா முகமது, காங்கிரஸ்: ’எனது வார்டுக்குட்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாலையில் செல்வதற்கு மிகுந்த பயமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் டியூஷன் முடித்து வரும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனே வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து, இந்த நாய்களைப் பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று தெரிவித்தார்.

42-வது வார்டு உறுப்பினர், கவிவேந்தன், திமுக: 'எனது பகுதியில் உள்ள பழமையான கிணறு கடந்த ஆட்சி காலத்தில் காணாமல் போய்விட்டது. அந்தக் கிணற்றை நகராட்சி நிர்வாகம் உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும்' என்றார்.

40-வது வார்டு உறுப்பினர், செந்தில், அதிமுக: ’கடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு செய்த எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை, அதை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார். மேலும், ’மகளிர் கல்லூரி எதிரே ரூ.9 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் அறிவியல் பூங்காவில், எந்தவித அனுமதியும் இல்லாமல் திடீரென பேனா சிலை அமைக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

அந்த பேனா சிலை எதற்காக வைக்கப்பட்டது. அந்த பேனா சிலைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரது பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து 'கலைஞர் பேனா, கலைஞர் பேனா' என கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சிக் கூட்டம் நடைபெறும் என்று செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை, நகர் மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி வெளியேறச் சொல்லியும், செய்தியாளர்கள் வெளியேறும் வரை தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த ஜெர்மனி தனி கவனம்: அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

ABOUT THE AUTHOR

...view details