தமிழ்நாடு

tamil nadu

'பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை' - ஆட்சியர் எச்சரிக்கை

By

Published : Nov 24, 2020, 5:46 PM IST

புதுக்கோட்டை: பேரிடர் காலங்களில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

collector
collector

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் போன்ற கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று (நவம்பர் 24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலான மழையும், புயல் அபாயமும் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு புயல் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் பாதுகாப்பு மையங்கள், பொது மக்களை தங்கவைக்கும் கட்டடங்கள், படகுகள் நிறுத்தும் இடம், மீன்பிடி படகுகளை பாதுகாத்தல், போன்றவை குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கல்லணை கால்வாய் மூலம் வரும் தண்ணீர் எவ்வித தடையுமின்றி கடலில் கலக்கும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகளான குளங்கள், ஏரிகளில் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் போதுமான அளவு மணல் மூட்டைகள் உள்ளனவா என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான முதலுதவி, பாதுகாப்பு வழிமுறைகளை வழங்க அனைத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதே போன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களும் மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீன்வளத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த 11 உயர் அலுவலர்கள் தலைமையில் 114 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details