தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூருக்கு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கத் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு பரிந்துரை..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 9:45 PM IST

Tamil Nadu Legislative Assembly Govt Committee: தமிழ்நாட்டிற்கு இனி புதிய மருத்துவக்கல்லூரி வரப்பெற்றால் அது பெரம்பலூர் மாவட்டத்திற்குத் தான் முதலில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு பரிந்துரை செய்துள்ளது.

Tamil Nadu Legislative Assembly Govt Committee
பெரம்பலூருக்கு புதிய மருத்துவக்கல்லூரி வழங்க தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு பரிந்துரை

பெரம்பலூருக்கு புதிய மருத்துவக்கல்லூரி வழங்க தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு பரிந்துரை

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு, பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன், “பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், ஏற்கனவே சட்டப் பேரவைக்கு அளிக்கப்பட்டிருந்த அறிக்கையில், இடம் பெற்றிருந்த நிலுவையிலிருந்த 4 உறுதிமொழிகளில் 2 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு, 2 உறுதிமொழிகள் நிலுவையிலிருந்தன.

பேரவைக்காக 53 உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், 26 உறுதிமொழிகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டு உறுதிமொழி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர் கோனேரி ஆற்றின் குறுக்கே ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை பார்வையிட்டோம்.

வேப்பந்தட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விடுதி 95 சதவீதம் பணிகள் முடிவுற்று விரைவில் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள அனைத்து இயந்திரங்களும் பழுதடைந்து ஆலை இனி இயங்காது என்ற நிலைமைக்கு வந்து, ஆலை இழுத்து மூடப்படும் என்ற அபாயம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்த சூழலில், தமிழக அரசு அதற்காக இதுவரை ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது 4 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட ஒரு ஆலையாக புதிய நவீன கருவிகள் பொருத்தப்பட்டு அந்த ஆலை தற்போது நல்ல முறையில் இயங்கி வருகிறது.

மேலும், 243 ஏக்கரில் சிப்காட் வளாகத்தில் கோத்தாரி காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதில் வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு காலணிகள் தயாரிக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலையில், உள்ளூர் நபர்களுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திற்குக் குழு பரிந்துரைத்துள்ளது.

பெரம்பலூர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பெரம்பலூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குத் தனி நுழைவாயில் அமைக்க வேண்டும் எனவும், அதற்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் இணை இயக்குநரிடமிருந்து மருத்துவமனைக்குத் தேவையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக்கூடிய அளவிற்கு மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனவும், பல்வேறு இதர பணியாளர் இடங்கள் நிரப்ப வேண்டும் எனவும், கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த கோரிக்கைகளையும் இக்குழு தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் 95% பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த கட்டிடத்தின் தரம் குறித்தும் குழு ஆய்வு செய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உறுதிமொழி குழு ஆய்வு செய்ததில், அனைத்து திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். கடந்த 2006 முதல் நிறைவு பெறாமல் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் செய்யப்படக்கூடிய தொழில்சார்ந்த பொருளாதார மண்டலம் என்ற திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் எதற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

10 முறை கூட்டம் நடத்தியும், அந்த நிறுவனம் பொருளாதார மண்டலத்தைக் கொண்டு வரவில்லை. எதிர்காலத்தில் அந்த நிலத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதால், நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் அந்த நிலத்தை மீண்டும் அரசுக்குச் சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக வருவாய்த்துறைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கும் நிலத்தைக் கையகப்படுத்த இக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இனி புதிய மருத்துவக்கல்லூரி வரப்பெற்றால் அது பெரம்பலூர் மாவட்டத்திற்குத் தான் முதலில் வழங்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைக்கின்றது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:“பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details