தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட நாட்டுச் சாராயம் அழிப்பு - இரு பெண்கள் கைது

By

Published : May 16, 2023, 2:20 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபர்களை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் அழிப்பு - இரு பெண்கள் கைது
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் அழிப்பு - இரு பெண்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வி மற்றும் அவரது குழுவினர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுச் சாராயம் விற்பனை, தயாரித்தல் மற்றும் ஊறல் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தேடி சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (மே 16) மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தனம் என்ற தனலெட்சுமி என்பவர் 4.300 லிட்டர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரியனூரைச் சேர்ந்த பவுனாம்பாள் என்பவர் 7 லிட்டர் நாட்டு சாராயத்தை விற்பனைக்காக பாக்கெட்டுகளில் வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி, அதே இடத்தில் காவல் துறையினர் அழித்தனர். அது மட்டுமல்லாமல், அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்ததற்காக தனலெட்சுமி மற்றும் பவுனாம்பாள் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநரின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மது வேட்டை நடத்தப்பட்டது.

இதில், அரசு அனுமதி இன்றி கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 46.600 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவையில் அனுமதியின்றி கள் இறக்கியதாக 83 வழக்குகள் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details