தமிழ்நாடு

tamil nadu

'I Love You சைலேந்திர பாபு, அவரை நேரில் பார்க்கணும்' - செல்போன் டவரில் ஏறி இளைஞர் ரவுசு

By

Published : Jun 26, 2023, 12:04 PM IST

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவை, நேரில் பார்த்து பேச வேண்டும் எனக் கோரி, சுரேஷ் என்ற இளைஞர், 150 அடி உயர செல்போன் டவரில் பெட்ரோல் கேன் உடன் ஏறிய சம்பவம், நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

youth-protest-climbs-cell-phone-tower-with-petrol-can-demanding-to-meet-dgp-sylendira-babu
டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில்பார்க்க வேண்டும் என கோரி பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

நாமக்கல்: டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில்பார்க்க வேண்டும் எனக் கோரி, நாமக்கல்லில் 150 அடி உயரத்தில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் நடத்தினார். 1 மணி நேர போராட்டத்திற்குப் பின், தீயணைப்புத் துறையினர், அந்த இளைஞரை, பேச்சுவார்த்தை நடத்தி மீட்டனர்.

நாமக்கல் மோகனூர் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் சுமார் 300 அடி உயரத்தில் செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த செல்போன் டவரின் 150 அடி உயரத்தில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் திடீரென ஏறிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மனு ஒன்றையும் பொது மக்களிடம் வழங்கிவிட்டு ஏறி உள்ளார்.

இளைஞர் சுரேஷ், பொதுமக்களிடம் வழங்கி இருந்த மனுவில், ''என் பெயர் சுரேஷ், நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு தாய், தந்தை, உற்றார் உறவினர் கிடையாது. நான் இம்முயற்சியில் ஈடுபட்டது, யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கத்தில் இல்லை. நான் இம்முயற்சியில் ஈடுபட்டதன் காரணம் சைலேந்திர பாபு அய்யாவை நேரில் பார்க்க வேண்டிய ஆவலின் காரணமாகவே. அவர் மீது மிகுந்த பற்று
கொண்டவன். நான் அவர் மீது பற்று ஏற்படக் காரணம்.

கடந்த 02.10.2017 அன்று அய்யா அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு சுற்று வந்த போது, நான் ஒரு கார் வழக்கில் அங்கு இருந்தேன். அய்யா அன்று எங்கள் முன் பேசிய வார்த்தைகளும், செய்த செயலும் என் உள்ளத்தில், உங்களை என் தாய், தந்தை, உற்றார் உறவினர் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பைக் கண்டேன். எங்களை போன்ற ஏழை சிறைவாசிகளின் கஷ்டங்களை அறிந்து மனிதனின் அன்றாடத் தேவையே குற்றத்தின் காரணம். அதில் உணவு முக்கியம்.

குற்றம் செய்பவர் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகளின் உரிமையாளர் டிஜிபி அய்யா அவர்கள் தான் என்பதை கண்ணார கண்டு மனதார உணர்ந்தவன் நான். என்னுடைய இந்த முயற்சிக்கு காரணம் நீங்கள் தான். ஸ்டுடன்ஸ் முயற்சி பண்ணுங்க-னு நீங்க சொன்னீங்க. இப்பொழுது என்னுடைய முயற்சி உங்களை பார்ப்பது மட்டுமே. உங்களுடன் பேசுவது மட்டுமே. நான் இதற்கு முன்பு பல முறை தங்களை பார்க்க வேண்டி முயற்சி செய்தேன். வருட பிறப்பு அன்று நீங்கள் கோவிலுக்குச் சென்ற போது உங்களை தூரத்தில் இருந்து பார்க்கும் பேறு, உங்களை நேரில் சந்திக்கும் முயற்சியைப் பெற்றேன். ஆனாலும் தொடர்ந்து தொடர்ந்து கொண்டுள்ளேன். இதை யார் பார்த்தாலும் அய்யாவிடம் தெரியபடுத்தவும். நான் உங்களை நேரில் பார்க்கவேண்டும். உங்களுடன் பேச வேண்டும்.I Love You சைலேந்திர பாபு, அய்யா செல்: 8754953148' என்று குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது திருந்தி வாழ்வதற்கு டி.ஜி.பி-யே காரணம் எனவும்; அவரை சந்திக்க முடியாத நிலையில், இந்த முடிவை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறையினர் அவரிடம் கைபேசியில் தொடர்ந்து பேசினர். இதனையடுத்து சுரேஷ் 1 மணி நேரத்திற்கு பின் கீழே இறங்கி வந்ததால் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் நிம்மதி அடைந்தனர். இதன்காரணமாக, அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 'இந்தியாவில் என்ன நடக்கிறது' - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details