தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் 3 லாரிகளில் திடீர் தீ விபத்து.. ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 12:21 PM IST

Namakkal Lorry fire accident: நாமக்கல்லில் சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

நாமக்கல்லில் 3 லாரிகள் திடீர் தீ விபத்து

நாமக்கல்: நாமக்கல் அருகே சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. லாரி தீ பிடித்து எரிவதைக் கண்ட பொதுமக்கள், நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தீயானது கொளுந்து விட்டு எரிந்ததால், உடனடியாக ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு லாரியில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 3 லாரிகளும், ஒரு லாரியில் இருந்த ஜவுளி சரக்குகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.

இதையும் படிங்க:சென்னையின் பிரபல திரையரங்கில் கிடா திரைப்படக் காட்சிகள் ரத்து - இயக்குநர் ஆதங்கம்!

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமாரின் ஜவுளி சரக்கு பாரத்துடன் லாரியையும், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மாதவி என்பவரது டேங்கர் லாரியும், நாமக்கல்லைச் சேர்ந்த உழவன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான காலி லாரியும் தீபாவளி பண்டிகையால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் ஜவுளி சரக்கு பாரத்துடன் இருந்த லாரியும், காலியாக இருந்த லாரியும் முழுமையாக எரிந்த நிலையில், டேங்கர் லாரி பகுதி அளவு எரிந்து சேதமடைந்ததுள்ளது. தீ விபத்தில் எரிந்த 3 லாரிகள் மற்றும் ஜவுளிகளின் சேத மதிப்பு ரூபாய் 90 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்தும், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் நல்லிபாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிவு; 3 ஆவது நாளாகத் தொடரும் மீட்புப் பணி - 40 பேரின் நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details