தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா பி. சிங் பொறுப்பேற்பு

By

Published : Jun 18, 2021, 7:54 AM IST

கூடுதல் ஆட்சியராகப் பதவி வகித்துவந்த ஸ்ரேயா பி. சிங், அரசு உத்தரவின்படி நேற்று (ஜூன் 17) நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஸ்ரேயா பி.சிங்
ஸ்ரேயா பி.சிங்

நாமக்கல்: தமிழ்நாடு முழுவதும் சென்ற வார இறுதியில் ஐஏஎஸ் அலுவலர்கள் பலர், பணி இட மாற்றம் செய்யப்பட்டனர். பல மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக ஸ்ரேயா பி. சிங் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக அப்பொறுப்பில் இருந்த மெகராஜ், நகராட்சி குடிநீர் மேலாண்மைத் துறையின் இணை இயக்குநராகப் பணியிடமாறுதல் செய்யப்பட்டார். கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஷ்ரேயா பி. சிங், பொறியியல் பட்டதாரி ஆவார். 2012ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் (ஐபிஎஸ்) தேர்வானார்.

ஆனால், அவரது கனவு, லட்சியமாக இருந்த ஐஏஎஸ் படிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

அதன்விளைவாக 2013ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்றார். பின்னர் அதே ஆண்டு குமரி மாவட்ட பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பத்மநாதபுரம் சார் ஆட்சியராகவும் பணிபுரிந்தார். அங்கிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகப் பணிபுரிந்தார்.

இந்நிலையிலேயே தற்போது அரசு உத்தரவின்படி, நேற்று (ஜூன் 17) நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இது குறித்து ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் பேசுகையில், "தற்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரே போராட்டம் கரோனா பரவலை ஒழிப்பதுதான். மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கரோனாவை முழுமையாக நம் நாட்டிலிருந்து அப்புறப்படுத்த அனைத்து நிலைகளிலும் தங்களது உழைப்பை செலுத்திவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக உருவாக, நான் உள்பட மாவட்ட நிர்வாகம் தொடர் உழைப்பைச் செலுத்தும்" என்றார்.

ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங்கின் கணவர் ஜோபி, பிரபல தனியார் மலையாள செய்தி நிறுவனத்தில், விளையாட்டுப் பிரிவில் மூத்த பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இருந்த இடத்திலிருந்தே புகார் அளிக்கலாம், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்!

ABOUT THE AUTHOR

...view details