தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

By

Published : Mar 25, 2021, 5:31 PM IST

நாமக்கல்: உத்திரகிடி காவல் ஊராட்சியில் திமுக வார்டு உறுப்பினராக இருந்த பெருமாள், பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
நாமக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி அடுத்த உத்திரகிடி காவல் ஊராட்சியில், 7ஆவது வார்டு திமுக உறுப்பினராக இருந்தவர் பெருமாள். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச் 24) இரவு தனது பணிகளை முடித்துவிட்டு, வெட்டுக்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

அப்போது பெருமாளின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பெருமாளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி சேந்தமங்கலம்-ராசிபுரம் சாலையில் வெட்டுக்காடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேளுக்குறிச்சி காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளித்ததன் பேரில், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இக்கொலைக்கான காரணம், இக்கொலையில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சரக்கு வாங்க காசு இல்லாமல் சானிடைசர் குடித்து உயிரைவிடும் மதுப்பிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details