தமிழ்நாடு

tamil nadu

வெல்ல ஆலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. ஜேடர்பாளையம் சம்பவத்தில் அமைச்சர் ஆய்வு..

By

Published : May 15, 2023, 7:38 PM IST

நாமக்கல் அருகே குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வெல்ல ஆலைகள் மற்றும் தொழிலாளர் குடியிருக்கும் பகுதிகளுக்கு துப்பாக்கி ஏற்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

minister
அமைச்சர்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் வடகரையாத்தூரில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கு சனிக்கிழமை (13.05.2023) நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர்.

இதில் ஒடிசாவை சேர்ந்த ராகேஷ் (19) , சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுகுராம் (28), யஷ்வந்த் (18), கோகுல் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளேன். முதலமைச்சரிடம் பேசி, தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி பெற்றுத் தரப்படும்" என்றார்.

இதற்கிடையே, தீ வைக்கப்பட்ட ஆலையில் ஏ.டி.ஜி.பி சங்கர், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட எஸ்.பிக்கள் நேற்று (மே 14) நேரில் ஆய்வு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி ராஜூ தலைமையில் 3 டி.எஸ்.பி-க்கள் என 8 தனிப்படைகள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டது. இன்று கூடுதலாக ஏ.டி.எஸ்.பி க்கள் கனகேஸ்வரி, செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 டி.எஸ்.பி க்கள் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 800 போலீசார் வரவழைக்கபட்டு ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து சாலைகள், கரும்பு ஆலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜேடர்பாளையத்தை சுற்றியுள்ள 20 ஆலை கொட்டகைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள ஆலைக் கொட்டைகைகளுக்கு மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஜேடர்பாளையத்தில் 15 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. 20 இருசக்கர வாகனங்கள், 4 ஜீப்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் ஆடுமேய்க்கச் சென்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு வடமாநில தொழிலாளர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டி உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் இவ்வழக்கில் உள்ளூரைச் சேர்ந்த மைனர் சிறுவன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் , உள்ளூர் மக்களிடையே பிரச்சனை இருந்து வருகிறது. பெண் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்: முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details