தமிழ்நாடு

tamil nadu

கல்லூரியில் அனுமதி இன்றி மரம் வெட்டிய முதல்வர் சஸ்பெண்ட்!

By

Published : Dec 16, 2022, 7:57 PM IST

ராசிபுரம் அரசு கல்லூரியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிய கல்லூரி முதல்வரை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரியில் அனுமதி இன்றி மரம் வெட்டிய முதல்வர்
கல்லூரியில் அனுமதி இன்றி மரம் வெட்டிய முதல்வர்

நாமக்கல்: ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கல்லூரி வளாகத்தில் பல்வகை மரங்கள் உள்ளன.

இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களை இயந்திரம் கொண்டு வெட்டப்பட்டு வாகனங்களில் வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக வருவாய்த்துறையினருக்கு மாணவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அக்டோபர் 31-ம் தேதி வருவாய் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கல்லூரி வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.

இதில் 6 வேப்பமரங்கள், 2 வாகை மரங்கள், 11 ஆயன் மரங்கள் என மொத்தம் 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்கள் கிளைகள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. எந்தவித அரசு முன்னனுமதியின்றி கல்லூரி முதல்வர் எஸ்.பங்காரு உத்தரவின் பேரில் 17 டன் எடை கொண்ட இந்த மரங்கள் வெட்டப்பட்டு கல்லூரிக்கு வெளியில் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ராசிபுரம் வட்டாச்சியர் கார்த்திகேயன் இது தொடர்பாக நாமக்கல் கோட்டாட்சியருக்கு நவம்பர் 1-ல் விசாரணை அறிக்கை சமர்பித்திருந்தார். அதன் அடிப்படையில், வெட்டப்பட்ட மரங்கள் குறித்த அளவீடு, விலை மதிப்பு குறித்து விசாரணை அறிக்கை வழங்க நாமக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

கல்லூரியில் அனுமதி இன்றி மரம் வெட்டிய முதல்வர்

இதன்பேரில் வனத்துறையினர் கல்லூரி வளாகத்தில் வெடப்பட்ட மரங்கள் வகைகள், எடை அளவீடு, விலை மதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் மொத்தம் 17 டன் எடை கொண்ட வேப்பம், வாகை, ஆயன் என 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்கள் கிளைகளும் வெட்டப்பட்டது தெரியவந்தது.

இதன் மொத்த மதிப்பு ரூ. 43 ஆயிரத்து 729 என்றும், தேசிய பசுமை தீர்பாயம், சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட பசுமைக்குழு உத்தரவின் படி முழுமையாக வெட்டப்பட்ட 19 மரங்களுக்கு ஈடாக மரம் ஒன்று தலா 10 மரக்கன்றுகள் என 190 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நட்டுவைத்து 8 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்றும் நாமக்கல் வனக்கோட்ட அலுவலர் அறிக்கை சமர்பித்திருந்தார்.

இதன் அடிப்படையில், வனத்துறை அறிக்கையினை ஆய்வு செய்த நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் த மஞ்சுளா, கல்லூரி வளாகத்தில் புதியதாக 190 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதுடன், வெட்டப்பட்ட மரங்களின் விலை மதிப்புக்கு ஈடாக 5 மடங்கு அபராதமாக மொத்தம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 645 அபராதம் கல்லூரி முதல்வர் செலுத்தவும், இதனை வட்டாட்சியர் பெற்று அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சூழலில் கல்லூரி வளாகத்தில் அனுமதி இன்றி மரங்களை வெட்டிய கல்லூரி முதல்வர் பங்காருவை பணி இடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மரம் வெட்டியது குறித்த விசாரணை முடியும் வரை பங்காரு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப கோளறா? - மா சுப்பிரமணியன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details