தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு; வாகனம் மீது கொடியை வீசி எறிந்து போராடியதால் பரபரப்பு!

By

Published : Apr 19, 2022, 4:03 PM IST

மயிலாடுதுறை - தருமபுரம் ஆதீனத்திற்கு வருகைதந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிராக பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (ஏப்.19) மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்மிகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வருகை தந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலை 9 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

ஆளுநர் வருகை: பின், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் திருமடத்தில் நடைபெறும் பவளவிழா ஆண்டு நினைவு கலையரங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா, அருங்காட்சியகம் திறப்பு விழா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் புஷ்கர விழாவிற்கு தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் செல்லும் ஞான ரதயாத்திரையைத் தொடங்கி வைக்கும் பணிக்காக கிளம்பினார்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகக் கருப்புக் கொடியை தூக்கி எறிந்து போராட்டம்

கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு:தரங்கம்பாடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் மன்னம்பந்தல் என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரி முன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போடுவதைக் கண்டித்து ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழர் உரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமுமுக உட்பட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் வாகனம் முன்பு, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு:அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் முன்பு வாகனத்தை நிறுத்தி மறைத்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்த கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஆளுநர் செல்லும் வாகனம் மீது எறிந்தும் சாலையில் எறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோ பேக், கோ பேக் ஆளுநர் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஆளுநர் தபால் வேலை பார்க்கலாம், தபாலை பிரித்துப் பார்க்கக் கூடாது- கி.வீரமணி

ABOUT THE AUTHOR

...view details