தமிழ்நாடு

tamil nadu

திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நடத்த எதிர்ப்பு

By

Published : Feb 8, 2022, 10:18 AM IST

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் சிவிகாரோஹணம் செய்து பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்
திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் குத்தாலம் அருகே அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை 14ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை என 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு குருபூஜை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. பத்தாம் நாளான நேற்று, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன. இதையடுத்து இரவு பட்டணப் பிரவேசம் நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்

நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநிலப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், காவலர்கள் கலைந்துபோகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீகோமுக்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். ஸ்ரீநமசிவாய மூர்த்திகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் குருமகா சந்நிதானம் சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார். இதில், சூரியனார்கோயில் கோயில் ஆதீனம் 28ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வைத்தீஸ்வரன் கோயில் தேர்த்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details