தமிழ்நாடு

tamil nadu

பணியில் இருக்கும்போதே பாஜகவில் இணைந்த இரு போலீசார் சஸ்பெண்ட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 4:34 PM IST

Updated : Jan 3, 2024, 4:45 PM IST

2 ASIs suspension: போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளர்.

பணியில் இருக்கும்போதே பாஜகவில் இணைந்த இரு போலீசார் சஸ்பெண்ட்
பணியில் இருக்கும்போதே பாஜகவில் இணைந்த இரு போலீசார் சஸ்பெண்ட்

நாகப்பட்டினம்:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை தொடங்கினார். கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றது.

தற்போது இந்த யாத்திரை டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தின்போது செல்போன் மூலம் மிஸ்ட் கால் கொடுத்து பாஜகவில் இணைவது, கூடாரங்கள் அமைத்து நேரடியாக உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல வழிகளில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் நடைபெற்றது. நாகை பப்ளிக் ஆபிஸ் சாலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அந்த பகுதியில் பந்தல் போடப்பட்டு, பாஜகவில் இணைய விருப்பம் உள்ளவர்கள் மிஸ்டு கால் கொடுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அங்கிருந்த சிலர் பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த வெளிப்பாளையும் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் பாஜகவில் இணைவதற்காக, தங்களது கைப்பேசியில் இருந்து மிஸ்டு கால் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் சார்பு- ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் நாகை ஆயுதப்படைப் பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக காவல் உயர்மட்டத்தில் நடைபெற்ற விசாரணையில், சார்பு உதவி காவல் ஆய்வாளர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தது உறுதிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

அரசுப் பணியில் இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது, எந்த ஒரு அரசியல் சார்ந்த நிகழ்ச்சியிலும் சீருடையில் இருக்கும்போது பங்கேற்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை..!

Last Updated : Jan 3, 2024, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details