தமிழ்நாடு

tamil nadu

மேகேதாட்டு... 'ஜூலை 17' நாள் குறிச்சிட்டாங்க: தீர்மானமும் போட்டுட்டாங்க!

By

Published : Jul 10, 2021, 10:27 PM IST

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணைகட்டும் முயற்சியைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் 17ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டம் நேற்றும், இன்றும் என இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், "சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது, நில உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கடந்த அதிமுக அரசு போட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுவது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுகிறது

டெல்லியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எட்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 585 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஒன்றிய அரசு விவசாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது.

வரும் 17ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி நடுவர் நீதிமன்றத்திற்கு விரோதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று அறிவித்திருப்பது கண்டனத்துக்குறியது.

மாநில அரசுகளிடையே பாகுபாடு

ஒன்றிய அரசு தங்களுக்குச் சாதகமாக உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் கூறுவது இந்திய அரசு, மாநில அரசுகளிடையே பாகுபாடு காட்டுவது தெரிகிறது. மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வருகின்ற 12ஆம் தேதி நடத்த உள்ளது வரவேற்கத்தக்கது.

கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியில் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணைகட்டும் முயற்சியைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் 17ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கொங்கு நாட்டுக்கு குறி: திமுகவில் ஐக்கியமாகும் தோப்பு வெங்கடாசலம்

ABOUT THE AUTHOR

...view details