தமிழ்நாடு

tamil nadu

காணாமல் போன நகை - ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறை

By

Published : Sep 24, 2021, 10:33 PM IST

மயிலாடுதுறையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகளை ஒருமணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

police-recovered-the-missing-jewelry-within-an-hour
police-recovered-the-missing-jewelry-within-an-hour

மயிலாடுதுறை: ஆயப்பாடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் அப்துல்குத்தூஸ் மனைவி மெகராஜ்கனி(46). இவரது மகள் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு கணவருடன் சொந்த ஊரான நீடூருக்கு திரும்பியுள்ளார். மகளை பார்ப்பதற்காகவும், அவரிடம் நகைகளை கொடுப்பதற்காகவும் ஆயப்பாடியிலிருந்து மயிலாடுதுறைக்கு மெகராஜ்கனி பேருந்தில் வந்துள்ளார்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்திறங்கிய மெகராஜ்கனி கச்சேரி சாலையில் உள்ள பிரபல பேக்கரி கடை ஒன்றில் இனிப்புகள் வாங்கியுள்ளார். பின்னர் மெகராஜ்கனி ஆட்டோவில் நீடூருக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் நகைகள் வைத்திருந்த பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காவல்துறையினர் விசாரணை

உடனே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மெகராஜ்கனி புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர், பேக்கரி கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பேக்கரி கடையில் மெகராஜ்கனி நகையை வைத்துவிட்டு வெளியே வந்தது தெரியவந்தது. இதையடுத்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் பேக்கரி கடையில் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேக்கரி கடையில் இருந்த ஊழியர்கள் மெகராஜ்கனி விட்டுச்சென்ற நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினருக்கு பாராட்டு

இதையடுத்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 31 பவுன் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மெகராஜ்கனியிடம் ஒப்படைத்தார். மேலும், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சிறப்பாக ஆய்வுசெய்து, தவறவிட்டு சென்ற நகையை ஒரு மணிநேரத்தில் மீட்டு சிறப்பாக பணியாற்றியதற்காக தலைமை காவலர் செந்தில்குமார், காவலர் சுகுணா ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சான்றிதழ் வழங்கினார்.

இதையும் படிங்க : நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details