தமிழ்நாடு

tamil nadu

நியாயமான வாடகைக்கு அறுவடை இயந்திரம் கிடைக்க நடவடிக்கை தேவை - விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Feb 8, 2023, 4:48 PM IST

பருவம் தவறி பெய்த மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வயலில் சாய்ந்து கிடக்கும் சம்பா, தாளடி நெற்பயிர்களை அறுவடை செய்ய தட்டுப்பாடின்றி இயந்திரங்கள் நியாயமான வாடகைக்கு கிடைப்பதற்கு வேளாண்மைத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியாயமான வாடகைக்கு எந்திரம் கிடைக்க நடவடிக்கை தேவை - விவசாயிகள் கோரிக்கை!
நியாயமான வாடகைக்கு எந்திரம் கிடைக்க நடவடிக்கை தேவை - விவசாயிகள் கோரிக்கை!

விவசாயி சதீஷ் அளித்த பேட்டி

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,70,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத அதீத கனமழையால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா அதிகளவிலும், மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் நடவு நட்ட நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை முடிந்த பின்னர், எஞ்சிய பயிர்களுக்கு உரமிட்டு விவசாயிகள் காப்பாற்றியதால் சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் மழை பெய்ததோடு, ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை கனமழை கொட்டி தீர்த்ததால் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய தாலுகாக்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 35,000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மிதக்கத் தொடங்கின.

39,000 ஏக்கர் பரப்பளவில் விதைப்பு செய்யப்பட்டிருந்த உளுந்து, பயிறு செடிகளும் மழைநீர் சூழ்ந்ததால் முற்றிலும் சேதமடைந்தது. இதனையடுத்து வேளாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் அரசு அலுவலர்கள் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டுச் சென்றனர். மேலும் கடந்த 2 நாட்களாக மழையில்லாததால் வயலில் சாய்ந்த முற்றிய நெல்மணிகள் முளைக்கத் தொடங்கின.

எனவே, இதனை இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் முயற்சிக்கும்போது, மாவட்டத்தில் இயந்திரங்கள் கிடைக்காததால் அறுவடைப் பணிகள் தொய்வடைந்து, சேதம் இன்னும் அதிகமாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், ஊடுபயிர்களான உளுந்து உள்பட பிற பயிறுகளுக்கு 3,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் எனவும், அறுவடை இயந்திரம் 50 சதவீத மானியத்தில் வாடகைக்கு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் டயர் டைப் அறுவடை இயந்திரங்கள்தான் உள்ளது. அதிலும் அவை 3 என்ற குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. அதேநேரம் மழை பெய்ததால் வயல்கள் சேறாக உள்ளன. இதனால் டயர் டைப் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பெல்ட் டைப் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்வதே சிரமாக இருக்கும் அளவிற்கு வயல்கள் சேறாக உள்ளது. தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 3,000 ரூபாய் வரை வாடகை கேட்பதாகத் தெரிகிறது. இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுவடை செய்யப்படும்.

ஆனால், மழையால் பயிர்கள் வயலில் சாய்ந்ததால், வயல் சேறாக இருப்பதால் ஒரு ஏக்கர் அறுவடை செய்வதற்கு குறைந்தது 2 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் வரை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் பெல்ட் டைப் இயந்திரங்களை வாங்கி, விவசாயிகளுக்கு அறுவடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால், தட்டுப்பாடு இன்றி இயந்திரங்கள் நியாயமான வாடகைக்கு அறுவடை செய்வதற்கு வேளாண்மைத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கனமழை சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details