தமிழ்நாடு

tamil nadu

இளம் விஞ்ஞானிகள் பயிற்சிப் பட்டறை; அலைக்கற்றைகளை கண்காணிப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி செயல் விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 6:48 PM IST

ISRO: சீர்காழியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை மற்றும் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த இஸ்ரோ விஞ்ஞானி, அலைக்கற்றைகளைக் கண்காணிப்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்.

ISRO Scientist Briefing on Observing Waves
அலைக்கற்றைகளை கண்காணிப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி செயல் விளக்கம்

அலைக்கற்றைகளை கண்காணிப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி செயல் விளக்கம்

மயிலாடுதுறை: சீர்காழியில் சுபம் வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இப்பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்த இஸ்ரோ விஞ்ஞானி முனைவர்.சுப்பிரமணி, செயற்கைக்கோள் செயல்படும் விதம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, செயற்கைக்கோள் அலைக்கற்றைகளைக் கண்காணிப்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். பின்னர், அமெரிக்க செயற்கைக்கோளான நோவா 18 செயற்கைக்கோளின் அலைக்கற்றைகளை கண்காணித்து காட்டினார். அப்போது தோன்றிய சப்தத்தைக் கேட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் ஆச்சரியத்துடன் அதனைக் கண்டனர்.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி முனைவர்.சுப்பிரமணி கூறுகையில், “முதன்முறையாக இந்தப் பள்ளியில் செயற்கைக்கோள்களை கண்காணிப்பது எப்படி என நிகழ்சி நடைபெற்று வருகிறது. இதில் நிகழ்காலங்களில் மாணவர்கள் எவ்வாறு கண்காணிப்பது, செயற்கைக்கோள்களிடம் இருந்து எவ்வாறு சிக்னலைப் பெறுவது‌, வீட்டில் இருந்தபடியே குறைவான செலவில் விண்வெளி அறிவியலை கற்றுக்கொள்வது என மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க செயற்கைக்கோள் சிக்னலை கண்காணித்துக் காட்டியது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் வரும் ஆண்டில் சீர்காழி சுற்றுவட்டாரப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும், விண்வெளி அறிவியலை கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க:சென்னையில் நாளை தொடங்குகிறது பொங்கல் விற்பனை கண்காட்சி.. இங்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details