தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 1:00 PM IST

Mayiladuthurai Fishing: கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கிராம மீனவர்கள், இன்று (ஜன.7) ஒருநாள் மட்டும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
வட கிழக்கு பருவமழை

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜன.7) முதல் வருகிற 10ஆம் தேதி வரை, பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) மதியம் தொடங்கி, இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, மயிலாடுதுறையில் 26.70 மிமீ, மணல்மேடு 4 மிமீ, சீர்காழி 62.40 மிமீ, கொள்ளிடம் 33 மிமீ, தரங்கம்பாடி 53 மிமீ, செம்பனார்கோவில் 38.60 மிமீ என சராசரியாக 36.28 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

தொடரும் மழையின் காரணமாக, தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கனமழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று ஒருநாள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னூர் பேட்டை முதல் சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்யூர், பெருமாள் பேட்டை, மாணிக்கபங்கு, சின்னங்குடி, வாணகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், கொடியம்பாளையம் வரை உள்ள 28 மீனவ கிராமத்தினர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இதன் காரணமாக 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஜன.11-க்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details