தமிழ்நாடு

tamil nadu

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்

By

Published : Sep 1, 2021, 1:47 PM IST

மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததைக் கண்டித்து உழவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

மயிலாடுதுறை:செருதியூர் ஊராட்சி முளப்பாக்கம் கிராமத்திலுள்ள ஐயனார் கோயில் களத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால் நிகழாண்டு குறுவைப் பருவத்துக்கு கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

இதனால், அப்பகுதி உழவர்கள் ஒன்றிணைந்து அந்தக் களத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கூரை அமைத்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து, ஒரு மாதமாக கொள்முதல் நிலையத்தில் காத்துவருகின்றனர்.

சாலை மறியல்

உடனடியாக கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மூங்கில் தோட்டம் கடைவீதியில் உழவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகள் இன்று (செப்டம்பர் 1) திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் பேருந்திலிருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்தே சென்றனர். மேலும், அவ்வழியாக வந்த அவசர ஊர்திக்கும், காரில் வந்த கர்ப்பிணிக்கும் வழிவிட்ட மக்கள், மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டு, சாலை ஓரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன், நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் உழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் குழு - உணவு வழங்கல் துறை

ABOUT THE AUTHOR

...view details