தமிழ்நாடு

tamil nadu

புதிதாக வாங்கிய பல்சர் ஸ்பீடாக செல்லவில்லை என குற்றச்சாட்டு.. ஷோரூமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வாடிக்கையாளர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 4:10 PM IST

மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயங்காததால் வாகனத்தை பஜாஜ் நிறுவனத்திடமே சரி செய்து தருமாறு வாடிக்கையாளர் ஒப்படைத்துள்ளார். தீர்வு ஏற்படுத்தி தராமல், பஜாஜ் நிறுவனம் வாடிக்கையாளரை அலைக்களித்ததால், ஆதரவாளர்களுடன் பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் இயங்காததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் இயங்காததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் இயங்காததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

மயிலாடுதுறை: நல்லத்துக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் குருமூர்த்தி(24). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பஜாஜ் ஷோரூமில் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் முழுப் பணத்தையும் செலுத்தி புதிய பல்சர் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் தினந்தோறும் கும்பகோணத்திற்கு வேலைக்குச் சென்று வந்த நிலையில், புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கவில்லை. அடைப்பு ஏற்பட்டு வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென்று நின்று, விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீனிவாசபுரம் பஜாஜ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் கேட்டபோது, முதல் சர்வீஸ் செய்தால் சரியாகும் என்றுக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் வண்டி வேகம் 40க்கு மேல் போகவில்லை. 510 கிலோமீட்டர் தூரம் வாகனம் இயங்கிய நிலையில், பல்சர் வாகனத்தை பஜாஜ் நிறுவனத்திடம் ஒப்படைத்து சரி செய்து தாருங்கள், அல்லது பணத்தை திருப்பித் தாருமாறுக் கூறியுள்ளார். முதல் சர்வீஸ் செய்தும் வண்டியின் வேகத்தை அதிகரிக்க முடியாததனால், கடந்த ஆகஸ்ட் மாதம் வண்டியை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.

வண்டியை வாங்கி வைத்துக் கொண்ட பஜாஜ் நிறுவனத்தினர், தீர்வு ஏற்படுத்தி தராமலும் பணத்தை குருமூர்த்தியிடம் கொடுக்காமலும் அலைக்களித்து வந்துள்ளனர். இதனையடுத்து, புதிய வண்டி என்ற பெயரில் தரமற்ற வாகனத்தை தனக்கு வழங்கி மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் அவரது வேலையை இழந்து விட்டதாகவும் சட்ட உதவி மையம் மூலம் குருமூர்த்தி வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணிலிருந்து தாங்கள் கொடுத்த புகார் தொடர்பாக எந்த விபரமும் இல்லை என்று எஸ்.எம்.எஸ்(குறுஞ்செய்தி) வந்துள்ளது. மயிலாடுதுறை பஜாஜ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி ஆத்திரமடைந்த குருமூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போதும் அங்கு யாரும் அவர்களை கண்டு கொள்ளவில்லை. இது குறித்து மேலாளரை கேட்க வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்கள் கூறியதால், நாளை (அக்.16) இது குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் அல்லது மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டு கடையை அடைப்போம் என்று எச்சரிக்கை விடுத்து குருமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கல் கலைந்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:லியோ வசூலில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு - டிக்கெட் முன்பதிவில் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details