தமிழ்நாடு

tamil nadu

'வேலைவாய்ப்புகள் இருக்கின்றன; ஆட்கள்தான் குறைவு' - முதலமைச்சர்

By

Published : Aug 28, 2020, 11:22 AM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகமாகவும், ஆட்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு என்று அண்மைக் காலமாக எழும் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்கும்விதமாக இக்கருத்தை அவர் தெரிவித்தார்.

cm-eps-on-job-opportunities-for-youth
cm-eps-on-job-opportunities-for-youth

நாகையில் கரோனா தடுப்புப் பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 207.56 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 43. 60 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தொழில்முனைவோர், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நீட் தேர்வை ஒத்திவைப்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறேன்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். முதற்கட்ட பணிகளுக்காக 128 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

ரெடிமேட் ஜவுளி பூங்காவால், 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாகை மிகப்பெரிய வளர்ச்சி அடையும். வேதாரண்யம், வண்டுவாஞ்சேரியில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப்பூங்கா அமைக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குழாய் பதிப்பு உள்ளிட்ட பழைய பணிகள் மட்டுமே நடைபெற்றுவருகின்றன. வேளாண் மண்டலமாக அறிவித்தபின் புதிய திட்டப் பணிகள் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை.

கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்வகையில் அதானி சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தற்போது சொல்ல முடியாது. 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்திற்குப் பிறகே முடிவு எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் 812 சாலைப் பணிகள், 33. 5 கோடி ரூபாய் மதிப்பில் வேளாங்கண்ணியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

நாகை மாவட்டத்தில் எரிகளைத் தூர்வாரி தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு என எழும் கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, "தமிழ்நாட்டில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்குப் பணி வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.

இதையும் படிங்க... நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details