தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு ரத்து.. காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 6:40 PM IST

Arulmigu Parimala Ranganathar Thirukovil: 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதான மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில், திருப்பணிகள் நடைபெறுவதால் நாளை (டிச.23) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

arulmigu-parimala-ranganathar-thirukovil-sorgavasal-not-open-due-to-work-of-kumbhabhishekham
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் ஆலயத்தின் திருப்பணிகள் காரணமாகச் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து..

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் ஸ்ரீ ரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களுல் ஐந்தாவது கோயில் இதுவாகும்.

திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதாக இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு, பெருமாள் தங்க ரத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருள்வார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகளுக்குப் பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடி, தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும். இதனையடுத்து, பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இக்கோயிலுக்கு மயிலாடுதுறை மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இக்கோயிலில் கடந்த 2009ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த 2023 செப்டம்பர் மாதம் கோயிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும், கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (டிச.23) சுவாமி புறப்பாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறாது என்றும், அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளுக்குப் பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடிய பின், பொதுமக்கள் வழக்கம் போல் மூலவர் மற்றும் உற்சவர் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் கோலாகலம்!

ABOUT THE AUTHOR

...view details