தமிழ்நாடு

tamil nadu

இசைக்கலைஞர்களை குறிவைத்து வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது கைது!

By

Published : Aug 5, 2022, 7:18 AM IST

மயிலாடுதுறையில் இசைக்கலைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இசைக்கலைஞர்களை குறிவைத்து வேலை மோசடியில் ஈடுபட்ட நபர் அதிரடியாக கைது!
இசைக்கலைஞர்களை குறிவைத்து வேலை மோசடியில் ஈடுபட்ட நபர் அதிரடியாக கைது!

மயிலாடுதுறை திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பூரணச்சந்திரன் (28). எட்டாம் வகுப்பு படித்த இவர், புரோகிதர் வேலை செய்து வருகிறார்.

இவர் தன்னுடன் தொழில் முறையில் பழக்கத்தில் உள்ள திருப்புங்கூர், மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களிடம், ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு 26 இசைக் கலைஞர்களிடமும், ஜெர்மனியில் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதன் மூலம் ஒவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை என வசூலித்துள்ளார். இவ்வாறு பெறப்பட்ட பணம் அனைத்தும் வெளிநாடு செல்ல விசா, டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி, ரூ.54.30 லட்சம் வரையிலும் பெற்றுள்ளார்.

மேலும், அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான போலி ஆவணங்கள் மற்றும் போலி விசாவும் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி, இவர்களில் 15 பேரை மட்டும் வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இசைக்கலைஞர்களை குறிவைத்து வேலை மோசடியில் ஈடுபட்ட நபர் அதிரடியாக கைது!

அங்கு அவர்களை விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதனை அறியாத கலைஞர்கள், விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கு வழங்கப்பட்டதும் போலி விசா மற்றும் போலி டிக்கெட் என தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து இசைக்கலைஞர்கள் அனைவரும் கடந்த 1 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பூரணச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், தலைமறைவான பூரணச்சந்திரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் பூரணச்சந்திரனின் செல்போன் டவரை பரிசோதித்ததில், அவர் சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார், பூரணச்சந்திரனை கைது செய்து மயிலாடுதுறை அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே பூரணச்சந்திரன் கைதானதை அறிந்த இசைக்கலைஞர்கள் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கைதான பூரணச்சந்திரன் மலேசியா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, அவரின் பாஸ்போர்ட் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:குழந்தையின்மை போக்குவதாக பல லட்சம் மோசடி- கருத்தரிப்பு மையம் மீது குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details