தமிழ்நாடு

tamil nadu

நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோத குவாரிகள்: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

By

Published : Apr 19, 2021, 5:27 PM IST

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோத குவாரிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கைத் தாக்கல்செய்யாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

MHC
MHC

விருதுநகரைச் சேர்ந்த திருமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டத்தில் எம் சாண்ட், உவரி மண், தூசி மண் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று ஆற்று மணல் திருட்டு நடைபெறுகிறது. இதனால் அரசுக்குப் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

மேலும் நீர்நிலைகளும் பெரிதும் பாதிப்படைகிறது. இது சம்பந்தமாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் மணல் குவாரிகளை நேரடியாக ஆய்வுசெய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைத்து ஆய்வுசெய்யவும், சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அப்பகுதி மண் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு முடிவு வருவதற்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் இதுவரை ஏன் அறிக்கைத் தாக்கல்செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை மதுரைக் கிளையில் தாக்கல்செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு தாக்கல்செய்யப்படவில்லை என்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details