தமிழ்நாடு

tamil nadu

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கு - நாளை விசாரணை!

By

Published : Mar 2, 2023, 1:32 PM IST

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை விதிக்கக்கோரிய வழக்கு, நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Plea
Plea

மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடை செயல்பட தற்காலிக தடை விதிக்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் முடியாததால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், தனியார் ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்டவையும் அருகில் இருப்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதேபோல், சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் கால்வாய் சரவணா ஸ்டோர்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில், மழை நீர் லேக் ஏரியா குடியிருப்பு பகுதிக்குள் புகுவதற்கு வாய்ப்புள்ளது. கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே, எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகளும் இல்லாமல் கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்திலிருந்து கழிவுகள் முறையாக வெளியேற்றப்படவில்லை.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும்வரை, சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும்வரை, சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை விதிக்க வேண்டும் அல்லது சில தளங்களையாவது மூட உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(மார்ச்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, சரவணா ஸ்டோர் வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தெரிவித்தது.

இதையும் படிங்க: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து… ஊழியர்கள் காயம்; செய்தியாளர்கள்மீது தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details