தமிழ்நாடு

tamil nadu

”புறநகர் மின்சார ரயில்களை இயக்க உத்தரவிடுக” - எம்பி சு.வெங்கடேசன்

By

Published : Oct 23, 2020, 5:45 PM IST

மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை உடனடியாக இயக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Order to run suburban electric trains demand MP Su Venkatesh
Order to run suburban electric trains demand MP Su Venkatesh

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கி, தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதியே தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே அமைச்சகம் தற்போதுவரை மின்சார புறநகர் ரயில்களை இயக்க அனுமதி வழங்காதது ஆச்சரியமளிக்கிறது.

மாநில அரசு அனுமதிக்காததால் தான் ரயில்கள் இயக்கப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முன்பு கூறியது. ஆனால் மாநில அரசு அனுமதி அளித்த பின்பும் இரண்டு மாதங்களாக ரயில்வே அமைச்சகம் அதன் மீது எந்த முடிவும் எடுக்காதது ஏன் என்று மக்களுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்க வேண்டும்.

எனக்கு கிடைத்த தகவலின்படி, ”எப்போது மற்ற பயணிகள் சிறப்பு வண்டிகளில் முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளை இணைக்கிறோமோ, அப்போதுதான் புறநகர ரயில்களை ஓட்ட முடியும்” என்று ரயில்வே அமைச்சகம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது மாநில அரசுதான். மாநில அரசே அனுமதி வழங்கியபின் இது குறித்து முடிவெடுக்காமல் புறக்கணிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல, நெருக்கடியான பேருந்துகளையோ அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையோ பயன்படுத்தி வருகிறார்கள். தொழிலகங்களும் அலுவலகங்களும் 100 விழுக்காடு திறந்த பிறகும், தொடர்ந்து அவர்களுக்கான பொதுப் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பது கேள்விக்குரியதாகும். ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடுகள், லாபமீட்டும் வண்டிகளை மட்டும் இயக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது.

புறநகர் ரயில்கள் என்பது வெகு மக்கள் பயன்பாட்டிற்கான ரயில்கள். தேச நலனின் அடிப்படையில் பார்த்து இந்த வண்டிகளை இயக்க வேண்டும். ரயில்வே அமைச்சகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details