தமிழ்நாடு

tamil nadu

மத்திய, மாநில வனத்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Aug 25, 2020, 1:22 AM IST

மதுரை: திருவாடானையில் ரூ. 2 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்ட சிங்க பற்கள், மான் கொம்புகள் பற்றி உரிய விசாரணை நடத்த கோரிய வழக்கில், மத்திய, மாநில வனத்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Notice to Central and State Forest Departments
Notice to Central and State Forest Departments

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், விலங்குகளின் உணவு சங்கிலி சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது. ஆனால், தற்போது சில விலங்குகள், பறவைகள் அழிந்துவரும் பட்டியலில் சேர்ந்து வருகின்றன. மேலும் பல விலங்குகள் தோல், உணவு, பற்கள் ஆகியவற்றிற்காக வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக சிங்கம், புலி, யானை, காண்டாமிருகம் ஆகிய விலங்குகள் தோல் பற்கள், கொம்புகள் ஆகியவற்றை கள்ளச்சந்தையில் விற்பதற்காக அதிகப்படியாக வேட்டையாடப்படுகின்றன.

சமீபத்தில் திருவாடானை காவல்துறையினரால் 2 கோடி ரூபாய் மதிக்கத்தக்க சிங்கத்தின் பற்கள், மானின் கொம்புகள் ஸ்ரீலங்காவிற்கு கடத்தப்படுவதற்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கங்கள், மான்கள் அதிகமாக குஜராத் வனப்பகுதியில் உள்ளன. அப்பகுதியில் வேட்டையாடப்பட்ட சிங்கத்தின் பற்கள், மான்களின் கொம்புகளை 2 ஆயிரத்து 225 கிலோமீட்டர் பயணம் செய்து ஸ்ரீலங்காவிற்கு கடத்த முயற்சி செய்தனர். விலங்குகளின் உறுப்புகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய கள்ளச்சந்தை உருவாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 நபர்கள் மீது முறையான விசாரணை நடைபெற வேண்டும். மேலும் இந்த வழக்கை வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகம் (WCCB) விசாரணை செய்ய வேண்டும் என பல்வேறு வனத்துறை சம்பந்தமான துறைகளை தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே ராமநாதபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சிங்கத்தின் பற்கள் மற்றும் மான் கொம்புகளின் வழக்கை வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகம் (WCCB) விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில வனத்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details