தமிழ்நாடு

tamil nadu

காந்தியின் கனவு நனவாகும்வரை தியாகிகள் பாடுபட வேண்டும் - சுதந்திரப்போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி

By

Published : Aug 10, 2022, 3:25 PM IST

”மக்களே... மக்களால்... மக்களுக்காக... என்ற காந்தி கண்ட கனவு நனவாகும்வரை தியாகிகள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்”, என சுதந்திரப்போராட்டத்தியாகி லட்சுமிகாந்தன் பாரதி தெரிவித்துள்ளார்.

காந்தியின் கனவு நனவாகும்வரை தியாகிகள் பாடு பட வேண்டும் - சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன்
காந்தியின் கனவு நனவாகும்வரை தியாகிகள் பாடு பட வேண்டும் - சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன்

மதுரை: இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக்கௌரவிக்கும் விழா நேற்று (ஆக.9) நடைபெற்றது.

இதில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசுகையில், ”இந்த நாட்டிற்கு மகாத்மா காந்தி ஏன் விடுதலை பெற்றுத்தந்தார்..? என்ற கேள்வியை எழுப்பி அதற்காக விடையைத்தேடும்போதுதான், தற்போது நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதனை உணர முடியும். மக்களே... மக்களால்... மக்களுக்காக... என்ற காந்தி கண்ட கனவு நனவாகும்வரை தியாகிகள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் தலைவர்களைச்சந்தித்து, உள்ளாட்சிகளே தங்களது கிராமங்களை நிர்வகிக்கும் ஆட்சி முறையைப் பெற வேண்டும் என தீர்மானம் இயற்ற மனு அளிக்க வேண்டும். அப்போதுதான் அதை நோக்கிய மாற்றத்திற்கு சிறு முன்னெடுப்பையாவது செய்தவர்கள் ஆவோம்”, என்றார்.

இவ்விழாவில் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், ”பிரிட்டிஷாரின் ஆட்சியில் அவர்களை எதிர்த்துப் போராடிய தியாகிகளுக்கு அப்போதுள்ள நீதியரசர்கள் தண்டனை வழங்கினர். தற்போது விடுதலை பெற்ற இந்தியாவில் நீதிபதியாக உள்ள நான் உங்கள் அனைவரின் பாதம் பணிந்து மரியாதை செய்கிறேன். இதுதான் காலத்தை வென்றவர்களின் அடையாளமாக நான் கருதுகிறேன்.

இந்த நாடு குறித்து நாம் எதிர்பார்ப்பது நடைபெற வேண்டுமென்றால், காந்தி கண்ட கனவு நனவாக வேண்டுமானால், விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வரலாற்றை இந்த தலைமுறை அறிந்து கொள்ள வழி செய்யவேண்டும்”, என்றார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் குமார் பேசுகையில், ”ஒரு நாட்டின் மீது கொண்டுள்ள பற்றுதான், ஒவ்வொருவரையும் தேசிய உணர்வோடு எழ வைக்கும். நான் அமெரிக்க நாட்டிற்கு முதன்முதலாகச்சென்றிருந்தபோது அங்குள்ள பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டேன். அப்பேருந்தின் ஓட்டுநர், ஒவ்வொரு தெருவின் முனையிலும் 'இது என்னுடைய சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரம்' என்று உரத்துக்குரல் எழுப்பினார்.

தன் தாய் மண்ணின் மீது அந்த ஓட்டுநருக்கு இருந்த பற்று என்னை வியக்க வைத்தது. அதுபோன்ற தேசப்பற்றுதான் இன்று மிக அவசியம்”, என்றார்.

பிறகு தியாகிகள் லட்சுமிகாந்தன் பாரதி, காரை யூசுப், நாகப்பன், சித்தன், முத்துமணி, அழகம்பெருமாள் கோனார், பரமசிவம், பானு என்ற சுந்தரராமன், பழ.சுப்பிரமணியன், வரதன், திருநாவுக்கரசு, பெருமாள், ஜோதிகண்ணன் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 13 தியாகிகளுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:75 -ஆவது சுதந்திர தினவிழா: இளைஞரின் கண்ணில் தேசியக்கொடி

ABOUT THE AUTHOR

...view details