தமிழ்நாடு

tamil nadu

தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கேட்டு வழக்கு: நீதிமன்றம் கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 4:00 PM IST

Thevar Jayanthi: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக் கோரிய மனு விசாரணையில், பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்த அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை:தேவர் குருபூஜை விழாவிற்கு செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் 500 அரசு பேருந்துகள் சிறப்பாக இயக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரி, உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கிலி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30 தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை நடைபெற உள்ளது.

முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவு ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள தேவர் சிலைக்கு அனைத்து கட்சித் தலைவர்கள், பெரியோர்கள் மற்றும் சமுதாய மக்கள் மரியாதை செலுத்துவார்கள். இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தர உள்ளனர். சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாடகை வாகனங்கள் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு வந்து மரியாதை செலுத்த வாடகை வாகனங்கள் மூலம் வருவதற்கு காவல்துறையிடம் மனு அளித்தோம்.

ஆனால், அனுமதி மறுக்கபட்டது. எனவே, பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வாடகை வாகனங்கள் மூலம் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என தனது மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு இன்று (அக்.19) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு ஆஜராகி 2017-ல் வாடகை வாகனத்தில் செல்ல உயர்நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. அதனைப் பின்பற்றி தற்போது வாடகை வாகன அனுமதி கொடுப்பதில்லை. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளது; இதனால், அனுமதிக்க முடியாது. ஆனால், மக்கள் தடையின்றி செல்ல 5 மாவட்டங்களில் இருந்து 500 பேருந்துகள் இயக்கபடுகின்றது என தெரிவித்தனர்.

இதனை கேட்ட நீதிபதிகள், 'அரசு விழாவான குருபூஜைக்கு வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ராமநாதபுர மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு உள்ளது அதனால் வாடகை வாகனங்களை அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், அரசு தரப்பில் பக்கத்து மாவட்டத்தில் இருந்து மக்கள் தடையின்றி வர 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மக்கள் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு பரிசீலனை செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வாடகை வாகனத்தில் செல்ல தடை விதித்த அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது' என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை விவகாரம்; தமிழக அரசு, ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details