தமிழ்நாடு

tamil nadu

VAO Murder Case: விஏஓ கொலை வழக்கினை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு!

By

Published : May 10, 2023, 7:52 PM IST

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை வழக்கு விசாரணையை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்துள்ளார். இருப்பினும், காவல் துறையினர் லூர்து பிரான்சிஸிற்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டனர். இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு, மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளியில் வராது. ஆகவே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உகந்ததா? என்பதற்காக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், " "தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 4 வாரத்தில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நீதிபதி 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: வேளாண்மை, மீன்வளப் படிப்புகளுக்கு ஜூன் 9ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details