தமிழ்நாடு

tamil nadu

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை - மதுரை கோர்ட் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 6:52 PM IST

MHMB case seeking ban on construction of Kollidam bore well: கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம், தொழில் நுட்ப ஆய்வு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை:திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, “திருச்சி மாவட்டத்தில் அன்பில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கின்றன. கொள்ளிடம் ஆறு மத்திய மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கொள்ளிடத்தில் நீரோட்டம் நன்றாக உள்ள போது மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் அதிகளவில் கிடைக்கும்.

கொள்ளிடம் வறண்டு கிடக்கும் போது மின் மோட்டார்களின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால், கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளாகவே மணல் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 2003-2017 ஆகிய 15 ஆண்டுகள் மிக மோசமான அளவில் மணல் கொள்ளை நடந்ததன் காரணமாக 90% கொள்ளிடம் அழிந்துவிட்டது.

அது மட்டுமல்லாமல் கொள்ளிடத்திலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலுள்ள சுமார் 30 நீரேற்று நிலையங்கள் கொள்ளிடத்தின் நிலத்தடி நீரைத் தினமும் கோடிக்கணக்கான லிட்டர் உறிஞ்சி எடுக்கின்றன. சுமார் 20 அடி ஆழத்தில் கிடைத்து வந்த தண்ணீர், இப்போது 70, 80 அடிகள் ஆழம் வரை சென்றுவிட்டது.

சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத் தேவைகளுக்காக மங்கம்மாள்புரம் எதிரே தென்கரை கோயிலடி பகுதியில் கதவணை அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்தும் செய்து தரவில்லை. இந்த நிலையில், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அன்பில் பகுதியில் ஆழ்துளை குழாய்க் கிணறு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் செயல். எனவே, விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அன்பில் பகுதியில் அமைக்கப்பட உள்ள ஆழ்துளைக் கிணறு பணிகளை நிறுத்தி தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குடிநீர் வசதிக்காக மட்டுமே கீழ அன்பில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

ஏற்கனவே வேறு இடத்தில் அமைக்கப்பட இருந்த ஆழ்துளை கிணறு, மக்களின் எதிர்ப்பால், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அரசு கீழ அன்பில் பகுதிக்கு மாற்றியது. மேலும் எந்தவிதமான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளமால் பணியை மேற்கொள்வதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, தொழில் நுட்ப ஆய்வுகளை முறையாக மேற்கொள்ளாமல் கீழ அன்பில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

கொள்ளிடம் ஆறோ, காவிரி ஆறோ முதலில் மக்களின் குடிநீர் தேவைக்கு தான் உள்ளன. எனவே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவித்தார். மேலும் தொழில் நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு இருந்தால் அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் அச்சுறுத்தலா? - ஆராய குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details