தமிழ்நாடு

tamil nadu

’எழுவர் விடுதலை குறித்து எங்களால் முடிவெடுக்க முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Aug 17, 2021, 6:02 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரன் தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுவை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எழுவரில் ஒருவரான ரவிச்சந்திரன், முன்னதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், நான் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

29 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில் மன உளைச்சல் ஏற்படுவதோடு, உடல் நலமும் பாதிக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.

இது குறித்து விரைவில் முடிவெடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 1,600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் எனது மனு காத்திருப்பில் உள்ளது. ஆகவே 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்," இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் ஏழு பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசுத் தலைவரின் முடிவுக்காக தற்போது காத்திருப்பில் உள்ளது " எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என்றும், முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் கூறி வழக்கை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:திராவிடச் சிறுத்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details