தமிழ்நாடு

tamil nadu

கங்கைகொண்டான் சிப்காட் கட்டுமானப் பணி; டாடா உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் கெடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 9:55 AM IST

Madurai Branch: கங்கைகொண்டானில் உள்ள சிப்காட், முறையான அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை நடத்தி வரும் டாடா சோலார் பேனல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

High Court Madurai Branch
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை:திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில், டாடா நிறுவனம் சோலார் பேனல் உற்பத்தித் தொழிலை நிறுவுவதற்கு கட்டடங்களை கட்டி வருகின்றனர். சுற்றுச்சூழல் காக்க மதீப்பீட்டு அறிக்கையின்படி, சுற்றுச்சூழல் முன் அனுமதி (Piror E.C) பெற வேண்டிய திட்டமாகும். ஆனால், இவர்கள் முன் அனுமதி பெறவில்லை.

எனவே, இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற்ற பிறகே தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும். மேலும், கட்டட வரைபட அனுமதியும் பெறவில்லை. எனவே, டாடா நிறுவனத்தின் டாடா சோலார் பேனல் உற்பத்தி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்” எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாடா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “இது டவுன் சிப் உருவாக்கவோ, வீடுகள் கட்டுவதற்கோ இல்லை. தொழிற்சாலைக்கான கட்டுமானம் நடக்கிறது. கட்டட வரைபட திட்ட அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவை இல்லை" என கூறினார்.

இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “நீர், காற்று சட்டபடி இவர்களின் கட்டுமான அளவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்" என தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கிற்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ஒரு வாரத்திற்குள் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அதைத் தொடர்ந்து அனுமதி பெற வேண்டும். கட்டட வரைபட அனுமதிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், நெல்லையில் உள்ள நகர் திட்டமிடல் உதவி இயக்குநரிடம் விரைவில் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details