தமிழ்நாடு

tamil nadu

உலக செவிலியர் தினம்: கண்கண்ட தேவதைகளைக் கொண்டாடுவோம்!

By

Published : May 12, 2020, 12:01 AM IST

Updated : May 27, 2020, 2:18 PM IST

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவை விரட்ட கண் துஞ்சாது; மெய்வருத்தம் பாராது; அல்லும் பகலும் போராடும் கண் கண்ட தேவதைகளைச் செவிலியர் தினத்தில் போற்றுவோம், கொண்டாடுவோம்!

உலக செவிலியர் தினம்: கண்கண்ட தேவதைகளுக்கு கங்கிராஜுலேஷன்
உலக செவிலியர் தினம்: கண்கண்ட தேவதைகளுக்கு கங்கிராஜுலேஷன்

பொதுவாக தேவதைகள் வெள்ளை நிற ஆடையில்தான் இருப்பார்கள் என்பதை நாம் திரைப்படங்களின் மூலம் கண்டிருப்போம். அப்படி, கரோனா காலத்தில் உண்மையில் தேவதைகளாய் இருக்கிறார்கள் இந்த வெள்ளுடை அணிந்த தேவதைகள். வெண்மை உடை தரித்த தேவதைகளாய் வலம்வரும் செவிலியர், மனித குலத்தையே மீட்கவந்த அற்புத படைப்பு.

நோயுற்று விழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அருகிலிருந்து சேவை செய்கின்ற மாற்று தாய்மார்கள் அவர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பில்தான் உலகத்தின் ஆன்மா உயிர் பெற்று நிற்கிறது என்றால் அது மிகையல்ல. ஆயிரம் மருந்துகள் செய்யாததை செவிலியரின் அன்பான சொல்லும், கருணைமிக்க செயலும் செய்துவிடும் என்பது மகத்தான உண்மை.

உலக செவிலியர் தினம்: கண்கண்ட தேவதைகளுக்கு கங்கிராஜுலேஷன்

அதுமட்டுமின்றி, உலகில் எந்த சுகாதாரப் போர் வந்தாலும், இவர்கள்தான் அன்பெனும் ஆயுதத்துடன் எதிர்த்துப் போராடும் முதல் வீரர்கள். அதை நாம் இந்தக் கரோனா காலத்தில் உணர்ந்திருப்போம். கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று உலகமெல்லாம் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த நாடுகளையே முடக்கிவைத்திருக்கும் சூழலில் செவிலியர் மட்டுமே விழி மூடாது பணிசெய்து நோயாளிகளைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் ஒப்பற்ற பணியைப் போற்றும் வண்ணம், இந்திய நாடு ஹெலிகாப்டர் மூலமாக நாடு முழுவதும் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தியது. வெள்ளுடை தேவைகளுக்கான தினமான இன்று உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

கைவிளக்கேந்திய காரிகையார் என்று போற்றப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலி பெண்மணியின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருடைய பிறந்தநாளான மே 12ஆம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதுமட்டுமின்றி, கரோனா காலத்தில் களத்திலிருந்து போராடும் செவிலியரைக் கவுரப்படுத்தும்விதமாக, இந்த 2020ஆம் ஆண்டு செவிலியர் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சில அடிகள் விலகிச்செல்லும் சாதாரண மனிதப் பண்பிலிருந்து வேறுபட்டவர்கள்தான் இவர்கள். எப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும், அவர்களின் அருகே தயக்கமின்றி செல்வதுடன், கனிவான சொற்களால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி, மீண்டும் நடமாடச் செய்விக்கின்ற அவர்களது ஒவ்வொரு செயலிலும் கடவுளின் கருணை வடிவம் உறைந்து கிடக்கிறது.

அந்தத் தேவதைகளை தினம் தினம் கொண்டாடுவது மட்டுமின்றி, அவர்களின் தினமான இன்று, அதுதான் செவிலியர் தினமான இன்று அவர்களை வாழ்த்தலாம். இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகள் வெள்ளுடை தேவதைகளே!

இதையும் படிங்க...சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பை தொடர முடியாத பழங்குடி மாணவி!

Last Updated :May 27, 2020, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details