தமிழ்நாடு

tamil nadu

'தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் பின்விளைவு' - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

By

Published : Mar 4, 2022, 7:33 AM IST

மதுரையின் டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பாக செயல்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மதுரை: தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 22ஆம் தேதி தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்படி மதுரை மாவட்டத்தின் டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 10ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி, சுயேட்சையாக போட்டியிட்ட பழனிசெல்வி ஆகிய இரு வேட்பாளர்களும் சம அளவில் வாக்குகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் பழனிசெல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இந்த அறிவிப்பை ரத்து செய்யுமாறும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்குமாறும் பழனிசெல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட காணொலியை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (மார்ச்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை பார்வையிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமானதாக தெரிவித்தனர். அத்துடன் தேர்தலை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் நிலையில், தேர்தல் அலுவலர் எப்படி அரசியல் கட்சி சார்பாக செயல்பட்டார்? எனவும் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணையம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டிருக்க வேண்டும். திருத்திய முடிவை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். காணொலி பதிவை நகல் எடுத்து பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரை வரும் மார்ச் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:காவல் துறையில் காலியாகவுள்ள 444 பணியிடங்களுக்கான அறிவிப்பு!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details