தமிழ்நாடு

tamil nadu

'சுதந்திரம் பெற்று 75 ஆண்டுளாகியும் சாதி, மதம் கடந்து பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டமானது' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:43 PM IST

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுளாகியும் சாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என வேதனை தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, 'இறப்பவர்களின் உடல்கள் நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கத்தை பின்பற்றி அடக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு ஒருங்கிணைந்த சட்டம்' கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: திருச்சி மாவட்டம், புத்தாநத்ததில் இஸ்லாமியர்களின் பொது மயானத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வாகித்து வருகிறது. இங்கு தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுவர்களுக்கு தனி மயானம் இருந்தது. அந்த மயானம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுபவர்களில் யாராவது இறந்தால், அவர்களின் உடல்களை சுன்னத்வால் ஜமாத் பராமரிப்பில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று (டிச.13) விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:-

  • சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுளாகியும் சாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக மயானங்கள் உள்ளன. இந்துக்களில் எஸ்சிக்கு தனியாகவும், பிற சாதியினருக்கு தனியாகவும் மயானங்கள் உள்ளன. பிற மதத்திலும் இந்த பாகுபாடு உள்ளது. இறப்பவர்களின் உடல்களை உரிய நேரத்தில் அடக்கம் செய்யாவிடாமல் தடுப்பதால் சடலத்தின் கண்ணியம் பாதிக்கப்படும், சுகாதார பாதிப்பும் ஏற்படும்.
  • இறப்பவர்களின் உடல்களை உரிய பழக்கவழக்கப்படி, அடக்கம் செய்யாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினர் அடையும் மனஉளைச்சலை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இறந்தவரின் உடல் 24 மணி நேரத்தில் அழுகத் தொடங்கும். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அனுதி கோரி, இந்த மனு தாக்கல் செய்ய தூண்டப்பட்டது, மரணத்தை விட சோகமானது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
  • இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், கிராம மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. இறப்பவர்களின் உடல்கள் நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கத்தை பின்பற்றி அடக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில், 'ஒருங்கிணைந்த சட்டம்' கொண்டுவர வேண்டும். இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்.
  • இனிமேல், எந்த குடும்பங்களும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் கதவுகளை தட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களுக்காக 'மெமு' ரயில்கள் இயக்கம் எப்போது? - பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details