தமிழ்நாடு

tamil nadu

மதுரை அறங்காவலர் குழு நியமன ரத்து விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 7:47 PM IST

Meenakshi Amman Temple Trustee Committee: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

hc branch dismissed the madurai temple trustee committee appointment cancellation petition
மதுரை கோயில் அறங்காவலர் குழு நியமன ரத்து மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டப்படி, அறங்காவலர்கள் கடந்த நவம்பர் 6ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.

அதில், கோயில் அறங்காவலர்களாக மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த PKM செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி மீனா அன்புநிதி ஆகிய 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த 5 அறங்காவலர்கள் நியமனமும், அரசியல் பின்புலம் கொண்டே நடைபெற்றுள்ளது. இந்த நியமனம், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த 5 பேரையும் அறங்காவலர்களாக நியமனம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன் இன்று (டிச.13) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அறங்காவலர்கள் நியமனத்தில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் ருக்மணி பழனிவேல் ராஜன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாயார் ஆவார். எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, “அறங்காவலர் நியமனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட்டு உள்ளது. 5 பேரில் 3 பேர் பெண்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே இந்த வழக்கில் எந்த பொதுநலனும் இல்லை. ஆகையால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், அறங்காவலர் நியமனத்தில் என்ன விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், “பொதுநல வழக்கு என்றால் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வழக்காக இருக்க வேண்டும். இந்த வழக்கை மனுதாரர் எந்த அடிப்படையில் தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரமே இல்லாமல் அரசு நியமனம் செய்த பதவியை குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அறங்காவலர் நியமனம் குறித்து உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை உத்தரவாக பிறப்பித்துள்ளது. அதனையும் மனுதாரர் கவனத்தில் கொள்ளவில்லை. மனுதாரர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக அரசுத்தரப்பு, அறிக்கையாக கொடுத்துள்ளது. அரசின் அறங்காவலர் நியமனம் நீதிமன்றத்திற்கு முழு திருப்தியை தந்துள்ளது.

3 பெண் அறங்காவலர்களை நியமிருந்திருப்பது அரசின் நடவடிக்கைகளால் கூடுதல் திருப்தியை அளித்துள்ளது. அரசின் நியமனத்தில் சந்தேகம் கொள்ளவோ, குறை கூறவோ எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு; டிச.18 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details