தமிழ்நாடு

tamil nadu

கோயில்களின் பெயரில் போலி இணையதளங்கள்.. விரைவில் உரிய வழிமுறைகள்!

By

Published : Dec 1, 2022, 5:09 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோயில்களின் பெயரில் இயங்கி வரும் போலி இணையதளங்கள் குறித்து உரிய வழிமுறைகளை விரைவில் வழங்க உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

பிரபல கோயில்களின் பெயரில் போலி இணையதளங்கள்.. விரைவில் உரிய வழிமுறைகள்!
பிரபல கோயில்களின் பெயரில் போலி இணையதளங்கள்.. விரைவில் உரிய வழிமுறைகள்!

மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள் மடங்கள் செயல்பட்டு வருகிறது.

இக்கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து தற்போது அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள், காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்றுச் செல்கின்றனர். வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோயில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தினை செலுத்துகின்றனர்.

முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பழனி தண்டாயுதபானி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் போன்ற பிரபலமான கோயில்களிலும்,

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 60ஆம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட சிறப்பாக நடைபெறும் கோயில்களிலும், சில தனியார் இணையதள முகவரி வைத்து கோயிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களின் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (டிச.1) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், கோயில் பெயரில் இணையதளங்களை கோயிலுக்கு சம்பந்தமில்லாத சிலர் வைத்துள்ளதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து “கோயில் இணையதளங்களின் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது” எனக்கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details