தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வி - தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்

By

Published : Dec 8, 2020, 4:05 PM IST

மதுரை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துள்ளதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

பாஜக தலைவர் எல்.முருகன்
lபாஜக தலைவர் எல்.முருகன்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடெங்கிலும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலர் ஆங்காங்கே போரட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, மதுரையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பன் என்ற பரப்புரை இயக்கத்தை விரைவில் தொடங்கவுள்ளோம். கிராமம் கிரமாமகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விளக்குவோம். மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தப் புதிய சட்டங்களால் அதிக அளவிலான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்ட இந்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன. மேலும் இதன் மூலம் வேளாண் பொருட்கள் சாலையில் வீணாக கொட்டுவதை தடுக்க முடியும்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

இச்சட்டத்தின் மூலமாக பாஜக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸும், திமுகவும் இதனை எதிர்க்கின்றன. இவ்விரு கட்சிகளும் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன. விவசாயிகள் தங்கள் வீட்டுப் பெண்களின் தாலியை அடகு வைத்து விவசாயம் செய்யும் நிலையை மோடி தலைமையிலான அரசு மாற்றியுள்ளது. பிரதமர் வழங்கிய ஆறாயிரம் ரூபாய் நிதி மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் 41 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். விவசாய காப்பீட்டுத் திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலமாக தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு விவசாயிகள் தாங்களே விலை நிர்ணயம் செய்ய முடியும். அதேபோன்று மதிப்பு கூட்டி விளைபொருட்களை விற்பனை செய்யவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் வரும்பட்சத்தில் அதனை அரசு திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளது.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது. அது போன்று இது ஜனநாயக நாடு இங்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை உண்டு. ரஜினிகாந்துடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும். பாஜகவின் பி டீம் ரஜினிகாந்த் என்று சிலர் கூறுவது அவரவர் சொந்த கருத்து. பாஜகவில் மேலும் பல பிரபலங்கள் வந்து இணைவார்கள்" என்றார்.

இதையும் படிங்க:திருச்சியில் விவசாயிகள் பேப்பர் ராக்கெட் விடும் நூதன போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details