தமிழ்நாடு

tamil nadu

"அந்த மனசு தான் சார் கடவுள்" - ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி அலுவலர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 1:52 PM IST

Bank Officer Donated Land for School: மதுரையில் தனக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை, வங்கி பெண் அலுவலர் பூரணம், அரசுப் பள்ளியின் தரம் உயர்த்த தானமாக வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bank Officer Donated Land for School
ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி அலுவலர்

மதுரை:ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

அதாவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் பூரணம், சுமார் ரூ.4 கோடி மதிப்புமிக்க அந்த இடத்தை தனது மகள் "ஜனனி" நினைவாக அரசுக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த நில பத்திரத்தை முறையாக மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி முன்னிலையில், பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை கல்விப் பணிக்காக தானம் வழங்கிய பூரணம், அதனை விளம்பரப்படுத்த மறுத்துவிட்டார். இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை, கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூரணத்திற்கு அப்பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார் மற்றும் கொடிக்குளம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தொன்றுதொட்டு அகப்பையை இலவசமாக வழங்கும் வேங்கராயன் குடிக்காடு குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details