தமிழ்நாடு

tamil nadu

"இந்த மலையைத்தான் கிரானைட் குவாரி ஆக்கப்போறீங்களா ஆபிசர்?" - சேக்கிப்பட்டி பனிமலைக்குட்டு பாறையில் ஆய்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 4:25 PM IST

Sekkipatti quarry tender issue: மேலூர் அருகே உள்ள சேக்கிப்பட்டி பனிமலைக்குட்டு மலையை கிரானைட் குவாரி அமைக்க உள்ள நிலையில், இது பழமை வாய்ந்த குகைத்தளமாக இருக்க வாய்ப்புள்ளது, ஆகையால் இங்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sekkipatti quarry tender issue
சேக்கிப்பட்டி பனிமலைக்குட்டு பாறையில் ஆய்வு

சேக்கிப்பட்டி பனிமலைக்குட்டு பாறையில் ஆய்வு!

மதுரை: கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரையில் குறிப்பிட்ட சில கிராமங்களில் கிரானைட் குவாரி அமைப்பதற்கான விண்ணப்பம் செய்ய அறிவிப்புச் செய்திருந்தார். அதில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள சேக்கிப்பட்டி, அய்யாப்பட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில் உள்ள மலைகள் மற்றும் பெரும் பாறைகளுக்குதான் இந்த விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

மேலும் கடந்த மாதம் அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி நாள் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சேக்கிப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள், மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் கிரானைட் குவாரி அமைக்கும் முடிவைக் கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து மனு அளித்தனர்.

மேலும் சேக்கிப்பட்டி கிராமத்திலுள்ள முத்தாலம்மன் கோயில் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 2 ஆம் நாள் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் ஏலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதனையடுத்து நிரந்தரமாகக் கைவிட வலியுறுத்தி சேக்கிப்பட்டி கிராம மக்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்தினர். தற்போது மதுரை இயற்கை பண்பாட்டு பேரவையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ப.தேவி அறிவுசெல்வம், அன்னவயல் காளிமுத்து, தமிழ்தாசன் மற்றும் வீரேஷ் சேக்கிப்பட்டியிலுள்ள பனிமலைக்குட்டு பாறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து நடுகல் ஆய்வாளர் பேராசிரியர் ப.தேவி அறிவுசெல்வம் கூறுகையில், 'மதுரை மாவட்டம் நத்தம் - மேலூர் சாலையில் உள்ள சேக்கிப்பட்டி கிராமத்தின் அருகே இந்த பனிமலைக்குட்டு அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியில் வவ்வால் புடவு என்று அழைக்கப்படும் ஒரு குகையோடு, இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் காணப்படுகின்றன.

முதல் குகையின் உள்ளே 50 பேர் அமரும் வகையில் விசாலமாக அமைந்துள்ளது. இங்கு மழை நீர் தேங்கி சிறு குளம் போன்று காட்சியளிக்கிறது. தண்ணீர் தேங்கியுள்ள அக்குகைத் தளத்தில் சமணர் படுக்கையை ஒத்த இரண்டு படுக்கைகள் காணப்படுகின்றன. அருகில் இருக்கும் மற்றொரு குகை, உள்ளே மிக நீண்டு செல்கிறது. இதில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் நிறைந்துள்ளதோடு கும்மிருட்டாகவும் உள்ளதால் குகையின் இறுதிப் பகுதி வரை சென்று பார்க்க சிரமமாக உள்ளது.

இப்புடவின் அடிவாரத்தில் மருந்து அரைக்கும் குழி ஒன்றும் காணப்படுகிறது. இதுபோன்ற குழிகள் பெரும்பாலும் சமண சமயத்தைத் தழுவிய முனிவர்கள் தங்குகின்ற பகுதியில்தான் இருப்பது வழக்கம். ஆகையால் இங்கு மிக விரிவான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் இக்குகையின் தரையில் காட்டுப்பன்றி, தேர், ஆடுபுலியாட்டக் கட்டம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாம் சுமார் 200 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். ஆனால், குகையின் உள்பகுதியில் எங்கேனும் ஓவியங்கள் இருந்து அதனைப் பார்த்து உள்ளூர் மக்கள் இவற்றை செதுக்கியிருக்கலாம் என்பது எங்கள் யூகம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பஸ்சில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது

ABOUT THE AUTHOR

...view details