தமிழ்நாடு

tamil nadu

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி

By

Published : Apr 22, 2022, 7:55 PM IST

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

நிதியுதவி வழங்கிய மாநகராட்சி ஆணையர்
நிதியுதவி வழங்கிய மாநகராட்சி ஆணையர்

மதுரை: பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டி உள்ளது. இங்கு நேற்றிரவு (ஏப்.21) 9 மணியளவில் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில், ஒப்பந்த தொழிலாளர்கள் சிவக்குமார் (44), சரவணகுமார் (30), லட்சுமணன் (33) ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, சிவக்குமார் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட மற்ற இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது அவர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். மூவரும் வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடினர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் தொட்டி முழுவதும் விஷவாயு பரவி இருந்தது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியோடு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். கழிவுநீர் தொட்டியில் இருந்து முதலில் மீட்கப்பட்ட சிவக்குமாரை, அவரது சகோதரரின் மகன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து லட்சுமணன், சரவணக்குமார் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன. பின்னர், உயிரிழந்த மூவரது உடல்களும் உடற்கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் லோகநாதன், ரமேஷ் மற்றும் விஜயஆனந்த் ஆகியோர் மீது எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதியுதவி வழங்கிய மாநகராட்சி ஆணையர்

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார். அப்போது, மதுரை மாநகர மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:அம்மாவான 17 வயது சிறுமி... காரணம் 12 வயது சிறுவன்... ஷாக்கில் தஞ்சாவூர்!

ABOUT THE AUTHOR

...view details