தமிழ்நாடு

tamil nadu

பெங்களூரு முழு அடைப்பு போராட்டம்; தமிழக பேருந்துகள் நிறுத்தம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 11:36 AM IST

Bangalore Bandh: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முழு அடைப்பை முன்னிட்டு சுமார் 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

Bangalore Bandh
பெங்களூரு முழு கடை அடைப்பு போராட்டம்; தமிழக பேருந்துகள் நிறுத்தம்

பெங்களூரு முழு அடைப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி: பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்தது. சட்ட ரீதியாகத் தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட வேண்டிய கட்டாயத்திற்குக் கர்நாடக அரசு தள்ளப்பட்டு நீர் திறக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட மறுப்பு தெரிவித்தும் கர்நாடக விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள், ஆட்டோர ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கர்நாடகா மாநிலத்தின் மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் முழு கடை அடைப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இன்று (செப் 26) பந்த் போராட்டம் நடைபெறும் என கன்னட விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதன் காரணமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்குச் செல்லும் அரசு பேருந்துகள் நேற்று (செப் 25) இரவு 8 மணி முதல் நிறுத்தப்பட்டது. அந்த வகையில், சுமார் 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழக பேருந்துகள் ஒசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது மற்றும் தமிழகத்தின் நகர பேருந்துகள் தமிழகத்தின் மாநில எல்லையான ஜூஜூவாடி வரையில் பயணிகளை இறக்கி விடுகின்றன. மேலும், கர்நாடகா மாநிலத்தில் முழு கடை அடைப்பில் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் ஒசூர் வழியாகவே இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மின் கட்டண உயர்வு..! தமிழக அரசை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details