தமிழ்நாடு

tamil nadu

சிறிய சந்தில் சிக்கிய நாய் குட்டி.. தாய் நாயின் பாசப்போராட்டம்.. கிருஷ்ணகிரி நெகிழ்ச்சி சம்பவம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 8:44 PM IST

Krishnagiri puppy story: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள சந்தில் சிக்கிக்கொண்ட குட்டி நாயை மீட்க தாய் நடத்திய பாரப்போராட்டம் வெற்றி பெற்றது.

சிக்கலான சந்திற்குள் சிக்கிய குட்டி நாய்  தீயணைப்பு துறையினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டது.
சிக்கலான சந்திற்குள் சிக்கிய குட்டி நாய் தீயணைப்பு துறையினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டது.

நாயின் பாசப்போராட்டம்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் உத்திரா. இவர் தனது வீட்டில் செல்லமாய் பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. பிறந்து 4 மாதமே ஆன அந்த குட்டி நாய், எதிர்பாராத விதமாக உத்திரா வீட்டிற்கும், அவரது பக்கத்து வீட்டிற்கும் இடையே உள்ள மிகச்சிறிய சந்து இடைவெளியில் இன்று (அக்.02) அதிகாலை ஒரு மணியளவில் சிக்கிக்கொண்டது.

சந்திற்குள் சிக்கிக்கொண்டு செய்தவறியாமல் தவித்த இந்நாய் குட்டி, நீண்ட நேரமாக சத்தம் எழுப்பியுள்ளது. இதைக் கேட்ட அதன் தாய் நாய், வீட்டிற்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த உத்திராவை எழுப்பி, குட்டி சிக்கிக்கொண்ட இடத்தை காட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், சிக்கலான சந்திற்குள் நாய் குட்டி மாட்டிக்கொண்டதை உணர்ந்த உத்திரா அதிர்ச்சிக்குள்ளானார். இதைத்தொடர்ந்து, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் நாய் குட்டியை மீட்க முடியவில்லை.

அதற்குள்ளாகத் தாய் நாய், அந்த வீதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று சத்தமிட்டு அனைவரையும் எழுப்பியுள்ளது. அதேபோல், பக்கத்து வீதியில் உள்ள சிலரையும் எழுப்பி பாசப்போராட்டத்தை நடத்தியுள்ளது. இரவு 1 மணியளவில் வீதியில் 20-க்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், பல்வேறு முயற்சிகள் எடுத்தும் குட்டி நாயை மீட்க முடியாமல், போச்சம்பள்ளி தீயணைப்புத்துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், அதிகாலை வரை முயற்சித்தும் குட்டி நாயை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனர். அதற்குள்ளாக அந்த வீதியில் உள்ள அனைவரும், குட்டி நாய்க்கு சிறிய கரண்டி மூலம் பால் கொடுத்து உற்சாகப்படுத்தினர். பின்னர் மீண்டும் தீயணைப்புத்துறையினர் 9 மணிக்குத் திரும்பிய நிலையில், பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மதியம் 1 மணியளவில் குட்டி நாயை பத்திரமாக மீட்டனர்.

தீயணைப்புத்துறையினரின் ஒவ்வொரு முயற்சியின் போதும், தாய் நாய் சத்தமிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. இதனிடையே, குட்டி நாய் மீட்கப்பட்டவுடன் அந்த வீதியில் உள்ள பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். முன்பாக, தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி வருவதை அறிந்த போச்சம்பள்ளி காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். மேலும், தாய் நாயின் பாசப் போராட்டத்தால் தான், குட்டி மீட்கப்பட்டது என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:CM MK Stalin : தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே திராவிட மாடலின் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ABOUT THE AUTHOR

...view details