தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரி வெடி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!

By

Published : Jul 29, 2023, 7:29 PM IST

Updated : Jul 29, 2023, 7:49 PM IST

Krishnagiri Crackers Warehouse fire: கிருஷ்ணகிரி வெடி விபத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதற்கான முழு விவரங்களும் இன்று இரவு தான் தெரியவரும். அதன் பின்பு விரைவான அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Etv Bharat காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி
Etv Bharat காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி

காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி

கிருஷ்ணகிரிநகராட்சி பழையப்பேட்டையில் வீட்டில் செயல்பட்டு வந்த உணவகம் ஒன்றில் கேஸ் கசிவு ஏற்ப்பட்டு தீ விபத்துக்குள்ளானது. இதில், அருகே உள்ள ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் தீ பரவிய நிலையில், தீ விபத்து கோர சம்பவமாக மாறியது. மூன்று வீடுகள் தரைமட்டமாகி, நடந்து சென்றவர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதில் பட்டாசு கடை உரிமையாளர் ரவி (45), அவரது மனைவி ஜெயஸ்ரீ (40), மகள் ரித்திகா (17), மகன் ரித்தீஷ் (15) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

முகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுவர்களும் இந்த விபத்தில் உயிரிழக்க நேர்ந்தது. மேலும், அருகில் வெல்டிங் கடை நடத்திய இப்ராஹிம், இம்ரான் ஆகிய இருவர், ஹோட்டல் நடத்திய ராஜேஸ்வரி, வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்த சரசு, ஜேம்ஸ் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில், குடோனில் பணியில் இருந்த சிலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். கரும்புகையுடன் இருந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடுபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “இந்த வெடி விபத்தின் காரணமாக 9 பேர் உயிரிந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு ஆறுதலுடன் என்னை நேரில் சென்று பணிகளை துரிதப்படுத்தி ஆய்வு செய்ய அனுப்பினார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோருடன் சேர்ந்து காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்.

சிகிச்சைப் பெற்று வரும் 10 பேரில் ஒரு பெண் மட்டும் தீவிர சிகிச்சைச் பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதி வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, துக்கத்தில் பங்கெடுக்க வந்துள்ளோம். விபத்திற்கான காரணம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது; இரவு தான் முழு விவரங்களும் தெரியவரும். அதன் பின்பு விரைவான அறிக்கை அளிக்கப்படும்.

பட்டாசு குடோனிற்கு 2024 ஆம் ஆண்டு வரை அனுமதி உள்ளது. இந்த மாவட்டத்தில் இது 3 ஆவது வெடி விபத்து, குடியிருப்புகளுக்கு இடையே குடோன் உள்ளதால் இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்படும். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

Last Updated :Jul 29, 2023, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details