தமிழ்நாடு

tamil nadu

சலவைத் தொழிலாளர்களுக்கு அரசு அமைத்துக் கொடுத்த வசதிகளை இடித்துத் தள்ளிய மாநகராட்சி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 5:55 PM IST

Hosur Ramanaicken Lake: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநாயக்கன் ஏரியில், துணிகள் துவைத்து சுமார் 50 வருடத்திற்கும் மேலாகச் சலவை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சலவைத் தொழிலாளர்களுக்கு அரசு அமைத்துக்கொடுத்த வசதிகளை இடித்து தள்ளிய மாநகராட்சி
சலவைத் தொழிலாளர்களுக்கு அரசு அமைத்துக்கொடுத்த வசதிகளை இடித்து தள்ளிய மாநகராட்சி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பழமை வாய்ந்ததும், மிகவும் பெரிய அளவிலான ராமநாயக்கன் ஏரி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுமார், 156 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியைக் கட்டியவர் பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கனார். அதனால் இவரது பெயரிலே இந்த ஏரி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் உள்ள நீர் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த ஏரிக்கரையை ஒட்டி சுமார் 50க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பங்கள், துணிகளைத் துவைத்து உலர்த்தி சலவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சலவைத் தொழிலை மேற்கொண்டு வருவதால், அவர்களுக்கென்று பிரத்தியேகமாகச் சலவை தொழிலாளர்கள் விடுதி, துணிகளை உணர்த்துவதற்கான அமைப்பு மற்றும் நீர்த்தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்தப் பகுதிகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் பசுமை பகுதிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் திட்டம் தீட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் வசித்து வரும் சலவைத் தொழிலாளர்கள் தங்களது பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி, மாநகராட்சி சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை அங்கிருந்து அகற்றிக் கொள்ளாமல் இருந்த நிலையில், இன்று (டிச.15) மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அங்கிருந்த ஆக்கிரமிப்புகளைக் குறிப்பாகச் சலவை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த வசதிகளை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த சலவைத் தொழிலாளர்கள், இந்த நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மாற்று ஏற்பாடு ஏதும் செய்து கொடுக்காமல், இது போன்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டித்தும், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:ஓசூர் அருகே லாரி மூலம் கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 கிரானைட் கற்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details