தமிழ்நாடு

tamil nadu

"சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகின.. ஆனால் எங்களுக்கு.." பட்டா, மின் இணைப்பு இல்லை என குமுறும் கிராம மக்கள்!

By

Published : Aug 15, 2023, 8:23 PM IST

நாடு சுதந்திரம் பெற்று 77ஆண்டுகள் ஆகியும், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்கப்படாமலும், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமலும் தவித்து வருவதாக சென்னசந்திரம் கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

பட்டா இன்றி தவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட உளியாளம், மாரசந்திரம், சென்னசந்திரம், கெம்பசந்திரம், காலஸ்திபுரம் என 6 கிராமங்களில், 1961ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்திய பிறகும் கூட, இக்கிராமங்களில் பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த கிராமங்களில் உரிய பட்டா பெறாமல் ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கர் பைமாசி நிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கிட, தனி டிஆர்ஓ தலைமையில் நில வரித்திட்ட அலுவலகம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதுவும் 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதிலும் பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று சுதந்திர தினத்தையொட்டி சென்னசந்திரம் கிராமத்தில் கிராம சபை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிராம சபையில் பங்கேற்க ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர், விஏஓ, அரசு பள்ளி தலைமையாசிரியர், மின்வாரிய ஊழியர், காவல்துறை என அனைத்து துறை சார்பிலும் அரசு ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் தங்களுக்கு பட்டா வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதை எதிர்க்கும் விதமாக கிராம மக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படு இருப்பதாகவும் கூறி, கிராம மக்களை கூட்டத்தில் பங்கேற்க அழைத்தபோதும், எத்தனை ஆண்டுகளானாலும், பட்டா வழங்கும் வரை கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "பல தலைமுறைகளாக சென்னசந்திரம் ஊராட்சியில் 6 கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நாள் வரை எங்கள் நிலங்களுக்கு பட்டா இல்லை. 2008ஆம் ஆண்டு வரை குடியிருப்புகளுக்கு, விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. எங்கள் கிராமத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்களையும் வழங்கினர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், கல்விக்கடன், கூட்டுறவு கடன் என எதையுமே எங்களால் பெற முடியவில்லை, பட்டா இல்லாத ஒரே காரணத்திற்காக நாங்கள் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருக்கிறோம். நம் நாடு சுதந்திரம் அடைந்த 77ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறோம். ஆனால் எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவே இல்லை" என்று தெரிவித்தனர்.

இதுவரை நடந்த எத்தனையோ கிராம சபை கூட்டங்களில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்றும், நடிகர் அஜித் நடித்த "சிட்டிசன்" என்ற திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போன்று, எங்களின் கிராமம் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது என்றும், அரசு பட்டா வழங்கும் வரை இனி வரும் அனைத்து கிராம சபை கூட்டங்களைப் புறக்கணிக்க இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: ‘மாநிலப் பட்டியலில் கல்வி’ - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details