தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக எல்லை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 8:24 PM IST

Cauvery water issue: கர்நாடகா அணைகளில் 90% நீர் இருப்பு இருந்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 93 டிஎம்சி நீரில் 13 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய அம்மாநில அரசைக் கண்டித்தும், இது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் வாய் மூடி இருப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Karnataka refusing to supply Cauvery water to Tamil Nadu Farmers staged a border block protest near Hosur
கர்நாடக எல்லை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கர்நாடக எல்லை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளியிலிருந்து காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து, கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட பேரணியாகச் சென்ற தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை இஎஸ்ஐ என்னுமிடத்தில் ஓசூர் போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

இதனால் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கான உரிமை நீரை, இந்த பருவத்தில் மட்டும் 93 டிஎம்சி தர வேண்டிய கர்நாடகா, வெறும் 13 டிஎம்சி மட்டுமே தண்ணீரைக் கொடுத்துள்ளது.

80 டிஎம்சி தண்ணீரை வழங்காமல் வஞ்சித்து இருக்கிறார்கள். ஆனால், மறுபுறம் கர்நாடக அணைகளில் 90 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. ஆனால், நமது மேட்டூர் அணையிலோ 124 அடியில், வெறும் 40 அடி மட்டும்தான் உள்ளது. அதிலிருந்து இன்னும் 7 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் நாம் பயன்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் காவிரியை நம்பி உள்ளனர். இதையெல்லாம் கேட்டு பெற்றுத் தராமல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காக, காவிரியின் உரிமைக்காக ஒரு போராட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்தாமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம், தென்பெண்ணை ஆற்றிலே கர்நாடக கழிவுநீரை விட்டு, தமிழ்நாட்டு மக்களை புற்றுநோய் உள்ளிட்ட கொடும் நோய்களுக்கு ஆளாக்கி சாவடித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் குடிநீரைத் தராமல், உரிமை நீரைத் தராமல் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம், கழிவு நீரை விட்டு நோய்களோடு இந்த மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இழிநிலையைப் போக்குவதற்காக, இதைச் செய்கின்ற கர்நாடகாவைக் கண்டித்து ஓசூர் எல்லையிலேயே கர்நாடக எல்லை முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்து அமைப்புகளையும் திரட்டி உரிமையைப் பெறும் வரை நாங்கள் தொடந்து இயங்குவோம்” என்றார்.

இதையும் படிங்க: கர்நாடகா முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details