தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் - 13 பேர் கைது; பதற்றத்தை தணிக்க போலீசார் குவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 7:50 PM IST

Krishnagiri communal clash: கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இது தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 13 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்
கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200க்கும் மேற்பட்ட மற்ற சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சோக்காடி கிராமத்தில் ஊர் பொதுவாக அமைந்துள்ள மாரியம்மன் கோயில் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக கோயிலின் அருகே உள்ள இடத்தில் கிரானைட் கற்களை பாலிஷ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் கிரானைட் கற்கள் பாலிஷ் செய்யும்போது அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால், வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளுமாறு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் நிலவியுள்ளது. இந்நிலையில் சோக்காடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர் ராஜன் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் சோக்காடி ராஜனுக்கும் பட்டியல் இன சமூக மக்களுக்கும் இடையே மீண்டும் கூடுதலாக மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சோக்காடி ராஜனை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இரு பிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு பட்டியல் இனத்து மக்களின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்கியும், குடிசைகள் அமைக்கப்பட்டிருந்த ஓலைகளுக்கு தீ வைத்தும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையிலான ஏராளமான காவல் துறையினர், சோக்காடி பகுதியில் குவிக்கப்பட்டு இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருதரப்பிலும் தகராறில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த 7 பேரும், பட்டியலின சமூகத்தை சார்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒன்றியச் செயலாளர் சோக்காடி ராஜன் தலைமறைவான நிலையில், மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு பிரிவு, கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:சிறையில் இருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்!

ABOUT THE AUTHOR

...view details